அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உள்ளிட்ட இலாகாக்கள் மற்ற இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம், வேலைக்குப் பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாகத் தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை ஒரு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தது.
இதையடுத்து, அமைச்சரை தன்னிச்சையாக நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் எனப் பலரும் ஆளுநரின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் திரும்பப் பெறுவதாக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பாடு குறித்து மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால் தமிழ்நாடு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். தேசிய அளவில் கூட்டணிக்கான நடவடிக்கையைத்தான் எடுத்துள்ளதால் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் திமுக அமைச்சர்களை குறிவைத்து பாஜக செயல்பட்டு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளுநர் தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்தது என்பது அவர் பாஜக கட்சியை சேர்ந்தவர் போல் செயல்படுவதைக் காட்டுகிறது. அமலாக்கத்துறையை தனது கிளை அலுவலகம் போல் பாஜக மாற்றியதால் தான் எடுத்த முடிவு சரியானது என ஆளுநர் கூறியுள்ளார். மாநில அரசு நிர்வாகம் சுமூகமாக செயல்படுவதை அனுமதிக்கக் கூடாது என அவர் செயல்படுகிறார். பொறுப்பற்ற முறையில் ஆளுநர் ரவி செயல்படுகிறார். பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் திமுகவில் எந்த மாற்றமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.