கடந்த 7ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ரஜினியின் தர்பார் பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி, முருகதாஸ், அனிருத், யோகி பாபு, விவேக், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஏற்பட்ட சில குளறுபடிகள், ரஜினியையே எரிச்சலடைய வைத்ததாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, அந்த விழா ஏற்பாட்டுக்கான முழுப் பொறுப்பையும், பா.ம.க. தலைவரான ஜி.கே.மணியின் மகன் முத்துக்குமரன்தான் ஏற்றிருந்தார். அவர் திருப்திகரமாக ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்கிற வருத்தம் ரஜினிக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக ரஜினியை நாயகனாக திரையுலகிற்கு அடையாளப்படுத்திய கலைஞானத்துக்கும், ரஜினியை தன் படங்கள் மூலம் சூப்பர் ஸ்டார் நிலைக்கு உயர்த்திய இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்து உட்கார வைக்கவில்லை என்று ரஜினி ரொம்பவே சங்கடப்பட்டதாக கூறுகின்றனர். இப்படி ஒருபக்கம் ’தர்பார்' தொடர்பான சில சச்சரவுகள் இருக்க, இன்னொரு பக்கம், ரஜினிக்கு எதிரான மன நிலையிலேயே இருக்கும் டாக்டர் ராமதாஸுக்குத் தெரிந்து தான், ஜி.கே. மணியின் மகன், அந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொண்டார் என்கிற குரல், பா.ம.க. தரப்பிலேயே இருக்கிறது என்கின்றனர்.