Skip to main content

‘தைரியமாக முடிவெடுப்பவர்’ - ஜானகி ராமச்சந்திரனுக்கு நடிகர் ரஜினி புகழாரம்!

Published on 24/11/2024 | Edited on 24/11/2024

 

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில்  சென்னை வானகரத்தில் இன்று (24.11.2024) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விழாவின் சிறப்பு மலரை வெளியிட்டார். அதனை எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயன் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடிகர் ரஜினி காந்த் காணொளி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆர்.காகத் திரை வாழ்வைத் தியாகம் செய்து கடைசி வரை அவருக்காக உறுதுணையாக இருந்தவர் ஜானகி ராமச்சந்திரன். ராமாவரம் தோட்டத்திற்கு யார் சென்றாலும் வயிறு நிறையச் சாப்பாடு கொடுத்து உபசரித்தார். கட்சி நலனுக்காகக் கட்சியை விட்டுக் கொடுத்தவர் ஜானகி ராமச்சந்திரன். அவரை நான் மூன்று முறை நேரில் சந்தித்து உள்ளேன். முதலாவதாக ராகவேந்திரா படத்தின் போது அவரை சந்தித்தேன். இரண்டாவது முறை அவர் முதலமைச்சராக இருந்த போது சந்தித்தேன். மூன்றாவது முறை நான் படப்பிடிப்பு தளத்தில் இருந்த போது என்னை அழைத்துப் பேசினார். அப்போது அவர் கையால் காபி போட்டுக் கொடுத்து உபசரித்தார்.

மேலும் திரைப்படங்களில் நான் புகை பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என ஜானகி ராமச்சந்திரனிடம், எம்.ஜி.ஆர். சொன்னதாக அவர் என்னிடம் சொன்னார். அவர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து தான். நான் அரசியலுக்கு வருவதாக முடிவு செய்து பலரிடம் ஆலோசனை கேட்டபோது பலரும் பல்வேறு கருத்துக்களைச் சொன்னார்கள். அதெல்லாம் கேட்டபோது பல்வேறு எண்ணங்கள் என் மனதில் ஏற்பட்டது. அரசியல் தெரிந்து சொல்கிறார்களா தெரியாமல் சொல்கிறார்களா என்று நான் யோசித்தேன். ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார் ஒரு முடிவை எடுப்பதாக இருந்தால் அது உனக்கு மட்டும் சந்தோஷம் தருவதாக இருந்தால் எடுக்காதே. மற்றவர்களுக்கும் அதனால் சந்தோஷம் கிடைக்கிறதா என்பதை உணர்ந்து எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு இக்கட்டான சூழல் காரணமாக ஜானகி ராமச்சந்திரன் அரசியலுக்கு வந்தார். ஜானகி ராமச்சந்திரன் மிகுந்த தைரியத்துடன் இருப்பவர். அவர் தைரியமாக முடிவெடுப்பவர். அந்த அடிப்படையில் ஜானகி ராமச்சந்திரன் தொண்டர்களின் சந்தோசம் தான் முக்கியம் என்று அதிமுகவின் சின்னமான இரட்டை இலை உட்பட அனைத்து கட்சி பொறுப்புகள், உடைமைகள் என அனைத்தையும் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார். அது அவரின் நல்ல குணம். பக்குவத்தை உணர்த்தியது. இன்று அவருக்கு நூற்றாண்டு விழா எடுத்துள்ள கட்சிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அக்கட்சியினருக்கும் நன்றி” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்