காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைக் கடந்து தற்போது உத்தரப்பிரதேசம் வந்தடைந்துள்ளது.
இந்திய ஒற்றுமைப் பயணத்திற்காக டெல்லியில் நடைபெற்ற பேரணியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்தப் பேரணியில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தொண்டர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
இந்திய ஒற்றுமைப் பயணம் முடிந்த பின் தமிழகம் திரும்பிய மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியினருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில், “பாரத் ஜோடோ யாத்திரைக்கான எனது அழைப்பில் இருந்த அவசரத்தையும் அவசியத்தையும் புரிந்துகொண்டு, சிரமங்களுக்கு இடையே பெரு முயற்சியெடுத்து என்னுடன் கலந்துகொண்டமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாறு நம்மை நினைவில் வைத்திருக்கும். உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். வருகிற ஜனவரி 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நான் ஏற்பாடு செய்துள்ள விருந்தில் நீங்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்.” எனக் கூறப்பட்டு இருந்தது.
இந்திய ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்ற தனது கட்சி நிர்வாகிகளுக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் கமல்ஹாசன் விருந்து வழங்கினார். கூட்டத்தில் பேசிய அவர், “பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. அதனை எதிர்க்கவே ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்டேன். மதத்திற்கு எதிரான அரசியலைத் தடுக்கவும் ஒற்றுமையை நிலைநாட்டுவதாகவும் ஒற்றுமைப் பயணம் அமைந்துள்ளது. பாஜக நடத்தும் மத அரசியல் தமிழகத்தில் எடுபடாது. இங்கு ஒருபோதும் மதப்பிரிவினையை ஏற்படுத்த முடியாது. ஏனென்றால் இது தமிழ்நாடு.
கட்சியினர் அனைவரும் ஒரே நோக்கத்தோடு செயல்பட வேண்டும். தற்போது கட்சி அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதால், கட்சியின் தலைவர்கள் கூறும் கருத்தை தான் கட்சியின் நிர்வாகிகளும் பேச வேண்டும். கட்சியின் தலைமை கூறும் கருத்துகளைப் பின்பற்றாத நபர்களை கட்சி பார்த்துக் கொண்டு இருக்காது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.