Skip to main content

தினம் ஒரு கொள்கையா? நல்ல வல்லுநர்கள் கிட்ட ஆலோசனை கேளுங்கள்... அதிமுக அரசை விமர்சித்த கே.என்.நேரு!

Published on 07/05/2020 | Edited on 07/05/2020

 

dmk


தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கருப்புச் சட்டை மற்றும் மாஸ்க் அணிந்து கையில் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் மு.க.ஸ்டாலினின் மனைவி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சமூக இடைவெளியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அதேபோல் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர், தங்கபாலு, கி.வீரமணி, பாலகிருஷ்ணன், ரவிக்குமார் எம்.பி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் கருப்புச் சின்னத்துடன் போராட்டம் நடத்தினர். சென்னை அண்ணா நகர் இல்லத்தில் கருப்புச் சட்டை மற்றும் கருப்புத் துண்டுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி போராட்டம் நடத்தினார். 


இந்த நிலையில் திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கருப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் பங்கேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போது, "கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நேரத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல் மூட வேண்டும் என அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூறிவரும் நிலையில், மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசு அதைக் கண்டுகொள்ளாமல் டாஸ்மாக் கடைகளைத் திறந்துள்ளனர். வருவாய் இல்லை என்பதற்காக டாஸ்மாக் கடைகளைத் திறக்கின்றனர். நமக்குக் கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு தராமல் இருப்பதே முக்கியக் காரணம்.

மேலும் மாநிலத்தில் வருவாய் இல்லை என்பதற்காக டாஸ்மாக் கடைகளைத் திறப்பதும், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல மாநில அரசு தினம் ஒரு கொள்கையைக் கடைப்பிடிப்பதைத் தவிர்த்துவிட்டு, நல்ல வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று சிறப்பாகச் செயல்பட வேண்டும்" என்று கூறினார். 


 

 

சார்ந்த செய்திகள்