
விடாமுயற்சி கொண்டவர் ராகுல்காந்தி என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான ராகுல்காந்திக்கு இன்று (19-06-24) பிறந்தநாள். அதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பிறந்தநாள் வாழ்த்து கூறி புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (19-06-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ராகுல்காந்திக்கு பிறந்தநாள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்தவர், “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு. ராகுல்காந்தி தனது விடா முயற்சியால் காங்கிரஸை கட்டிக் காக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.
கடந்த மாதம், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வீடியோவை வெளியிட்டு ‘நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்’ என்று எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டியிருந்தார். காங்கிரஸ் தலைவரை செல்லூர் ராஜூ புகழ்ந்து பேசியதற்கு அ.தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. மேலும், செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை அ.தி.மு.க நிர்வாகிகளின் ஒரு தரப்பு அக்கட்சியின் தலைமைக்குப் புகார் கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து, ராகுல் காந்தியைப் புகழ்ந்து பதிவிட்ட வீடியோ பதிவை செல்லூர் ராஜு நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.