Skip to main content

கலைஞர்  நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள  நிலையில் விமர்சிப்பது பண்பல்ல!  பெ. மணியரசன்

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
karuna

 

திமுக தலைவர் கலைஞர் உடல் நலிவடைந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.   இதுகுறித்து  தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’கலைஞர் உடல்நலம் மேலும் நலிவடைந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவ்வப்போது பல வதந்திகள் வந்தன. அது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் தமிழ் இன உணர்வாளர்கள், கலைஞரின் சாவை வரவேற்பது போல் சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டல், தாக்குதல் என எழுதி வருகிறார்கள். இது சரியன்று; இது மனிதப் பண்பிற்கும், தமிழர் மரபிற்கும் முரணான மனநிலை! 

 

யாருடைய சாவையும் கொண்டாடும் மரபு தமிழர்க்கில்லை. நரகாசுரன் கொல்லப்பட்ட கொண்டாட்டம் (தீபாவளி) - பத்மாசுரன் கொல்லப்பட்ட கொண்டாட்டம் என்பவையெல்லாம் ஆரியப் பண்பாட்டின் உருவாக்கங்கள்! அனைவர்க்கும் பொது விழா பொங்கல் விழா! கார்த்திகை தீபவிழா, மார்கழி ஏகாதசி, தைப்பூசம் போன்ற ஆன்மிக விழாக்கள்  நேர்மறை விழாக்கள்! எதிர்மறை விழாக்கள் அல்ல! 

 

கலைஞரின் அரசியல் விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அது எப்போது? அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் போதா? அவர் நலம்பெற்று மீள வேண்டும் என்று இலட்சக்கணக்கான ஏன் கோடிக்கணக்கான தமிழ் மக்கள் விருப்பமும் வேண்டுதலும் தெரிவித்துக் கொண்டிருக்கும் போதா? 

 

இவ்வாறான விமர்சனங்கள், கேலிகள், கிண்டல்கள், வசைமாரிகள் கலைஞரைக் காயப்படுத்தப் போவதில்லை. அவா நலம் நாடி நிற்கும் மக்களின் மனங்களைத்தான் காயப்படுத்தும். அந்த மக்கள் யார்? நமக்கு அயலாரா? இல்லை! 

 

நம் தமிழர்களிடையே ஒரு மரபுத் தொடர் இருக்கிறது. ஒரு கொடிய நோயால் அல்லது ஒரு கொடுமையால் மிகவும் துன்பப்படும் ஒருவர் “என் எதிரிக்குக் கூட இந்தத் துன்பம் வரக்கூடாது” என்று கூறுவார்! இந்தத் தமிழரின் மனநிலைக்கு ஏற்றதா, கலைஞர் நோயைச் சாக்கிட்டு அவரை விமர்சிப்பதும் அவர் மீது வசைமாறி பொழிவதும் என்று இளைஞர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். 

 

அரசியல் எதிரியைத் தருக்கத்தில் வெல்ல முயல்வது வேறு; அவரைப் பழிவாங்கும் வன்மத்தை வளர்த்துக் கொள்வது வேறு. 

காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் அதனதன் வணிகப் போட்டியில், கலைஞர் அவர்களின் சாதனைகளை மிகைப்படுத்தி, ஒரு குறையும் இல்லாதவர் போல் சித்தரிக்கின்றன. அவற்றைக் கண்டு இளைஞர்கள் பதற்றப்படத் தேவை இல்லை! 

 

கருத்துப் போர் புரியும் வீரர்களாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு நோயைப் பயன்படுத்தி தாக்குதல் தொடுக்கும் தந்திரக்காரர்களாக இருக்கக் கூடாது. மூப்பும் நோயும் எல்லார்க்கும் வரும். நமக்கும் வரும். சாவும் அப்படியே!’’
 

சார்ந்த செய்திகள்