மயிலாடுதுறையில் திமுகவின் பாகமுகவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில் அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “மத்திய பாசிச பாஜக அரசு என்ன செய்துகொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் தொலைக்காட்சிகளிலோ நாளிதழ்களிலோ பார்த்திருப்பீர்கள். தொடர்ந்து ஐ.டி ரெய்ட், ஈ.டி ரெய்ட், சிபிஐ என திமுகவை அச்சுறுத்த முயல்கின்றனர். திமுகவினர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தையே பார்த்தவர்கள். இந்த ஈ.டிக்கும் மோடிக்குமா நாம் பயப்படப் போகிறோம். நம்மைப் பார்த்து ஏன் அவர்கள் பயப்படுகிறார்கள் என்றால், இந்தியாவெங்கும் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகளை முன்னால் நின்று செய்து வருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனால் தான் பாஜகவிற்கு திமுகவைப் பார்த்து பயம்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோலை நிறுவியது போல் திராவிட மாடல் ஆட்சியை ஆரிய மாடலாக மாற்றும் நினைக்கும் பாஜகவின் முயற்சி தமிழ்நாட்டில் பலிக்காது. நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மயிலாடுதுறையில் இன்றே துவங்கிவிட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை விரட்டியது போல் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் எஜமானர்களை ஓட ஓட விரட்ட வேண்டும். பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தை பாஜக அமைச்சர்கள் தமிழ்நாட்டில் நடத்துவது சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அல்ல. அது 9 வருட வேதனை” எனக் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒட்டுமொத்த தமிழகமும் பாஜகவை எதிர்க்கிறது. ஒருபோதும் பாஜகவை தமிழ்நாடு ஏற்காது. திமுகவாக இருக்கட்டும், தமிழ்நாட்டு மக்களாகட்டும், தொடர்ந்து பாஜகவை எதிர்த்துக்கொண்டே தான் இருப்பார்கள்” என்றார்.