மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆச்சாள்புர பகுதிகளைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் கடந்த வாரம் வடகிழக்குப் பருவ மழை அதிகமாகப் பெய்தது. அதிலும் சீர்காழி, மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் மழை அதிக அளவு பெய்ததால் காணும் இடம் எங்கிலும் மழை நீர் சூழ்ந்து கடல் போலக் காட்சி அளித்தது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். இதன் பின் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வருடா வருடம் மாநில பேரிடர் பாதிப்பு நிதி வழங்குகிறது. அந்த வகையில் தமிழகத்திற்கு இந்த வருடம் வந்துள்ள பணம் 856 கோடி. அதில் முதல் தவணையாக 428 கோடி ரூபாய் வந்துள்ளது. தற்போது முதல்வர் அறிவித்துள்ளதெல்லாம் பேரிடர் பாதிப்பு விதிமுறைகளில் உள்ளதுதான். ஆனால் இதைத் தாண்டி முதல்வர் அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
குடும்ப அட்டைக்கு 1000 கொடுக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார்கள். 1000 எப்படி மக்களுக்குப் போதுமானதாக இருக்கும். முதல்வர் உடனடியாக ஒரு குடும்ப அட்டைக்கு மயிலாடுதுறையில் சிறப்பாக 5000 கொடுக்க வேண்டும். அதே போல் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் ஏக்கருக்கு 30,000 இழப்பீடு தொகையாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
குடும்ப அட்டைக்கு 1000 என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்வர் வந்து பார்த்துவிட்டுச் சென்றுள்ளார். முதல்வருக்கு இந்த கஷ்டம் தெரியும். முதல்வர் வேகமாக வந்து பார்த்துச் சென்றுள்ளார். அப்படி இருக்கையில் முதல்வருக்குத் தாக்கம் தெரியும். எனவே அதிகாரிகளின் பேச்சைக் கேட்காது குடும்ப அட்டைக்கு 5000 கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக ஒருநாள் பாஜக ஆட்சியில் அமரும் அதில் மாற்றுக் கருத்து இல்லை” எனக் கூறினார்.