தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 6 ராஜ்யசபா உறுப்பினர்களில் பாமகவின் அன்புமணி, தி.மு.க.வின் வில்சன், சண்முகம், அ.தி.மு.க.வின் முகமது ஜான், சந்திரசேகர் இவர்களோடு ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோவும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள். 23 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோவின் கர்ஜனைக்குரல் மீண்டும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க ஆரம்பிச்சிருக்கு. இதற்காக 2 நாள் முன்னதாகவே டெல்லி சென்ற வைகோ, தன் நெருங்கிய நண்பரான மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டஸ் வீட்டிற்குப் போய், அவர் படத்துக்கு நெகிழ்வாக அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல் பா.ஜ.க.வின் சீனியர் மோஸ்ட் லீடரான அத்வானியையும் சந்திச்ச வைகோ, 23 வருசத்துக்கு பிறகு மீண்டும் நான் ராஜ்ய சபாவுக்கு நுழையக் காரணமானவர் ஸ்டாலின்னு பெருமிதமா கூறியிருக்கிறார். இதனால் திமுக தரப்பு மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் கடந்த 24-ந்தேதியோடு தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.க்களான மைத்ரேயன், லட்சுமணன், அர்ஜுனன், செல்வ ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா ஆகியோரின் பதவிக் காலம் முடிஞ்சிது. மீண்டும் நாடாளுமன்றம் வர வாய்ப்பு கிடைக்காத மைத்ரேயன் பேசும்போது, எனது பாராளுமன்ற சகாப்தம் முடியுது. ஆனால் இனிமேல் மாநில அரசியலில் என் சூர்யோதயம் ஆரம்பிக்கிதுன்னு கண்ணீரோடு விடைபெற்றுக்கிட்டார்.
ஜெ.’வின் கடைசி நாள்வரை அப்பல்லோவில் இருந்து அனைத்தையும் கவனித்தவரான துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு ராஜ்யசபா தலைவரின் இருக்கையிலிருந்து மைத்ரேயனின் பேச்சைக் கூர்ந்து கவனித்தார். அதோடு ஆகஸ்ட் 7, கலைஞரின் முதலாமாண்டு நினைவுநாள். அன்றைய தினம் முரசொலி அலுவலக வளாகத்தில் கலைஞர் சிலையை மம்தா திறந்து வைக்கிறார். அதற்கு ரஜினி, கமல் எல்லாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கு. யார் யார் வருவாங்கன்னு டெல்லி அரசியல் வட்டராம் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.