தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அரசியல் பிரமுகர்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரசு இயந்திரங்கள் எந்த அளவிற்கு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. திமுக கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக கோவையில் வாக்குச்சாவடியின் வாசலில் பண விநியோகம்! ஆளுங்கட்சிக்கு சாதகமாக பல இடங்களில் வாக்குப்பதிவும் நிறுத்தப்பட்டு வருகிறது.
அமைச்சர் முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது. மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா?’ என குற்றச்சாட்டை முன்வைத்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார், “சென்னை அண்ணாநகரில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் வாக்கு கள்ள ஓட்டாக போடப்படவில்லை. அவர் எப்போது வந்தாலும் வாக்கு செலுத்தலாம்” என்று தெரிவித்துள்ளார்.