"கரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள இந்த இக்கட்டான சூழலில் பள்ளிகளை திறப்பதில் அரசு மிகுந்த கவனம் வைக்க வேண்டும். தனியார் பள்ளிகள் கட்டாயமாக கல்வி கட்டணம் வசூலிப்பதை அரசு உடனே தலையிட்டு தடுக்க வேண்டும் என முக்குலத்துப்புலிகள் அமைப்பு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து முக்குலத்து புலிகள் அமைப்பின் தலைவர் ஆறு.சரவணன் கூறுகையில், "உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுநோய் இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதியோர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டு பலர் இறந்துள்ளனர். தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சுகாதார துறையினரும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுதும் பல தளர்வுகளோடு ஊரடங்கு நீடித்தாலும், பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தாலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை விதித்தும்கூட, இ-பாஸ் உள்ளிட்ட கடுப்பாடுகள் விதித்தும், நோய் பரவலை அரசால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இந்தநிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு தற்போது அடுத்த வகுப்புக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டால் மற்ற மாணவ மாணவிகளுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. கரோனா தாக்கம் குறைந்து அடுத்த ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் திறந்தால் மாணவர்கள் அச்சமின்றி கல்வி கற்க உகந்ததாக இருக்கும். அரசு இந்த விஷயத்தில் அவரசம் காட்டாமல் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும், தற்போதைய சூழலில் பள்ளிகளை திறக்கக்கூடாது.
கரோனா ஊரடங்கால் பெரும்பாலான பெற்றோர்கள் வேலைவாய்ப்பின்றி குடும்பத்தை நடத்த, அத்தியாவசிய தேவைகளுக்கே சிரமப்பட்டு வரும் சூழலில் பல தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை செலுத்தக்கோரி எஸ்.எம்.எஸ். மூலம் நிர்பந்தப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு இதை கண்காணித்து இதுபோல் செயல்படும் தனியார் பள்ளிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்து அந்த கல்வி நிறுவனங்களின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்" என்கிறார்.