முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு, 7-ந் தேதி மாலை 4 மணியளவில், ஜூம் செயலி மூலம் சிறப்புக் காணொளிக் கவியரங்கம் நிகழ்ந்தது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் சார்பில், கவிச்சுடர் பொற்கைப்பாண்டியன் இதை ஏற்பாடு செய்திருந்தார்.
கவிமாமணிகள் ஆரூர் தமிழ்நாடனும், வெற்றிப்பேரொளியும் கவியரங்கைக் கவிபாடித் தொடங்கிவைக்க, ஈஸ்வரராஜா வரவேற்புக் கவிதை வாசித்தார். நிகழ்சிக்குத் தலைமை ஏற்ற திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் “கலைஞரைப் போன்ற ஒரு தலைவரை உலகில் எங்கும் பார்க்க முடியாது. அவரது நினைவாற்றலுக்கு எவரும் ஈடு இணையில்லை. நான் மாற்றுக்கட்சியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்களோடு தி.மு.க.வில் சேர்ந்த நிலையில், அவர் என்மீது பேரன்பு காட்டினார். நினைவாற்றல் குறைந்த நிலையிலும், என்னைப் பார்த்ததும் மதுரை சரவணனா? என்று கேட்டு என்னை நெகிழவைத்தார். கலைஞர்தான் உலக தமிழர்களின் ஒரே ஒப்பற்றத் தலைவர். கலைஞர் இல்லை என்றால் தமிழகம் விடிந்திருக்காது. அப்படிப்பட்ட அந்த மாபெரும் தலைவரை, நீங்கள் கவிபாடி வாழ்த்துவது பெரும் மகிழ்வைத் தருகிறது” என்றார் உற்சாகமாய்.
கவிச்சுடர் பொற்கைப்பாண்டியன் தனது தலைமை கவிதையில், "கலைஞரே உங்களால்தான், எங்கள் இடுப்பு வேட்டி தோளுக்கு வந்தது. எங்கள் கையில் இருந்த செருப்பு காலுக்கு வந்தது. எங்கள் வானத்திற்கு சூரியன் வந்தது. எங்கள் வாழ்வுக்கு விடியல் வந்தது” என்று கைத்தட்டல் வாங்கினார்.
தொடர்ந்து, கவிச்சுடர் கல்யாணசுந்தரம், திருச்சி கவிசெல்வா, சித்தார்த் பாண்டியன், ரேவதி அழகர்சாமி, அன்புசெல்வி சுப்புராஜ், தாரமங்கலம் முத்துசாமி, ஒசூர் மணிமேகலை, கனகா பாலன், கிருஷ்ண திலகா, கருப்பையா, சரஸ்வதி பாஸ்கரன், கிருஷ்ணா கிருஷ், இம்மானுவேல் உள்ளிட்ட உலக அளவிலான 97 கவிஞர்கள் இதில் பங்கேற்றுக் கலைஞருக்கு கவிமாலை சூட்டினர். கவிஞர் தொல்காப்பியன் கவிதைகளால் நன்றி சொன்னார். கலைஞருக்கான இந்தக் கவியரங்கம் அன்றைய மாலைப் பொழுதைக் கவிதைகளால் நனைத்தது.