மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைத்து 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. தற்போது 10வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் பாஜகவானது 9வது ஆண்டை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. மேலும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் பாஜக சார்பில் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் எனப் பலரும் பாஜக அரசின் சாதனைகளை விளக்கிப் பேசி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று பாஜகவின் 9 ஆண்டுக்கால சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "பாஜக அரசு மக்களுக்கு அதிகாரமளிக்க விரும்புகிறது. அதனால் தான் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. மக்களுக்கு பணியாற்றுவதை நாங்கள் விரும்புகிறோம். சிலர் இதில் அரசியல் செய்கின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 300க்கும் அதிகமான இடங்களில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்" என்றார்.