நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மக்களவை தொகுதிகளுக்கான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியின் வேட்பாளார்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை இன்று (26.12.2024) மேற்கொண்டார்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “வரும் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற அறப்போராட்டம். சர்வாதிகாரத்தில் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது. மதத்தின் பெயரில் அரசியல் செய்யும் பா.ஜ.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வைக்கப்பட்ட கரும்புள்ளி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும். அன்று கேட்ட மரண ஓலம் இன்றும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. செய்திகள் மூலம் தான் தூப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி தெரிந்து கொண்டேன் என்று அப்போதைய முதலமைச்சர் பழனிசாமி சொன்னது பொய். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் கொலை செய்யப்பட்டனர். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்து தான் துப்பாக்கி சூடு நடந்துள்ளது என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமே தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி கலவரத்தில் ஈடுபடாதவர்கள் மீது அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தில் வலுவான வாதத்தை தமிழ்நாடு அரசு முன் வைத்துள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கட்சத்தீவு மீட்கப்படும் என்று கூறினீர்களே. அது நடந்ததா?. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ரூ.15 லட்சம் தருவோம் என்று சொன்னீர்களே. அதனை செய்தார்களா. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது. விவசாயிகளை எதிரி போல் நடத்துவது தான் பா.ஜ.க.வின் அரசின் மாடலா. தி.மு.க. அரசின் கொள்கை எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். பேரு மட்டும் பிரதமர் வீடு கட்டும் திட்டம். ஆனால் அதில், 60% நிதி மாநில அரசுதான் தருகிறது. இப்படி ஸ்டிக்கர் ஒட்டி கேவலமாக பிரசாரம் செய்கின்றனர்.
பழனிசாமி யார்?. நேற்று யாரோடு இருந்தார்?. இன்று யாரோடு இருக்கிறார்? நாளை யாருடன் இருப்பார்?. நேரத்திற்கு ஏற்றார் போல் மாறுவார் என்பதை மக்கள் எடை போட்டு தீர்ப்பளிப்பார்கள். பழனிசாமி அவர்களே உங்களுக்கு முன்னாள், இன்னாள் கிடையாது என்னாளும் பா.ஜ.க.தான் எஜமானரா?. மோடியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாத பாதம்தாங்கி பழனிசாமிதான் தமிழ்நாட்டை காப்பாற்றப் போகிறாரா?. பழனிசாமி அவர்களே! மாநில உரிமைகளை அடகு வைத்ததே நீங்கள்தான். மோடி பற்றி பாசாங்கிற்குகூட பத்து வார்த்தை பேசாத பழனிசாமி, மாநில உரிமைகளை மீட்கப் போகிறாராம். பச்சைப் பொய் பழனிசாமினு மக்கள் சும்மாவா சொன்னாங்க. தி.மு.க. - அ.தி.மு.க. இடையே தான் போட்டி என எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்காரு. அந்த அளவிற்காவது அவருக்கு புரிதல் இருக்கே என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பழனிசாமி அவர்களே களத்தில் மோதுவோம் மக்கள் தீர்ப்பளிக்கட்டும்.
தமிழக மீனவர்கள் கைது, அபராதம் விதிப்பு, படகுகள் பறிமுதல் என மோடி ஆட்சியில் இலங்கை அரசு அறிவிக்கப்படாத போரை நடத்திக் கொண்டிருக்கிறது. மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்காத பிரதமர் மோடி விஸ்வகுருவா? அல்லது மௌனகுருவா?. கச்சத்தீவு மீட்கப்படும் என்று சுஷ்மா ஸ்வராஜ் சொன்னார். ஆனால் இன்று வரை பா.ஜ.க. அரசு அதை செய்துள்ளதா. தமிழக மீனவர்களை காக்கத்தவறிய மோடி எந்த முகத்தை வைத்து வாக்கு கேட்க வருகிறார்” எனத் தெரிவித்தார்.