கோவையைச் சேர்ந்த லாரி டிரைவரான ரவிச்சந்திரன் என்பவரைத் தேடிவந்த ஆந்திர போலீஸ், அரிசி கடத்திய வழக்கு என்று சொல்லி, அவரை அள்ளிக் கொண்டுபோனது. வழக்கில் தொடர்பில்லாத அவரை அங்கே கொண்டு போய் கடுமையாகச் சித்திரவதை செய்ததோடு, அங்குள்ள சிறையிலும் அடைத்துவிட்டது.
தான் நிரபராதி என்று அவர் கதறிய கதறல் அங்கு எடுபடவில்லை. தகவல் அறிந்து பதறிப் போன ரவிச்சந்திரனின் மனைவி வாணீஸ்வரி, ஆந்திராவுக்கே போய் போராடியும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
இதனால் நிலைகுலைந்து போனது ரவிச்சந்திரனின் குடும்பம். இந்த நிலையில் இந்தத் தகவல் எழுத்தாளர் பாமரன் கவனத்துக்கு வர, அவர் உடனே நடிகர் சத்தியராஜைத் தொடர்பு கொண்டு விவரித்து, ”அண்ணே, இது ஆந்திர விவகாரம். அதனால், அங்கு எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகை ரோஜாவைத் தொடர்பு கொண்டு உதவுங்கள்” என்றார்.
சத்தியராஜா, ”பாதிக்கப்பட்டவர் நிரபராதிதானா? என்பதை முதலில் உறுதிசெய்யுங்கள்” என்றார். உடனே அவினாசியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜெரால்ட் மூலம் விசாரித்துவிட்டு, பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் குற்றமற்றவர் என்றார் சத்யராஜிடம். அவர் உடனடியாக, ரோஜாவின் கணவரான இயக்குநர் செல்வமணியின் கவனத்துக்கு இதைக் கொண்டுபோனார்.
செல்வமணியோ, டிரைவர் ரவிச்சந்திரனின் மனைவியைத் தொடர்பு கொண்டு, முழு விபரத்தையும் தெரிந்துகொண்டு மனம் கலங்கினார். உடனடியாக செல்வமணி, ஆந்திராவில் இருந்த தன் மனைவி ரோஜாவைத் தொடர்புகொண்டு விபரம் முழுதையும் சொல்ல, சட்டமன்ற உறுப்பினர் ரோஜாவினது அதிரடி ஆக்ஷனின் பேரில், இரண்டுமாத ஆந்திர வதையில் இருந்து ஜாமீனில் விடுபட்டு, இரண்டு நாட்களுக்கு முன் கோவைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். இப்போது ரவிச்சந்திரனின் குடும்பமே நடிகை ரோஜா தம்பதியரையும், நடிகர் சத்தியராஜையும் பாமரனையும் நெகிழ்வோடு வாழ்த்திக்கொண்டிருக்கிறது.