ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெஹபூபா முப்தி தலையிலான ம.ஜ.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், அம்மாநிலத்தில் போர்நிறுத்தம் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் பா.ஜ.க. மெஹபூபாவின் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வழங்கிவந்த ஆதரவை திரும்பப் பெற்றது.
இதையடுத்து, அம்மாநிலத்தில் ஆட்சிக் கவிழுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வர் மெஹபூபா முப்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். 2015ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 87 தொகுதிகளில் 25 இடங்களில் பா.ஜ.க.வும், 27 இடங்களில் மெஹபூபாவின் மக்கள் ஜனநாயகக் கட்சியும், காங்கிரஸ் 12 இடங்களிலும், உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி 15 இடங்களிலும் வெற்றிபெற்று பெரும்பான்மை இல்லாத சூழல் நிலவியது. இதையடுத்து, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து மெஹபூபா முப்தி முதல்வராக ஆட்சி செய்துவந்தார்.
தற்போது அம்மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில், மெஹபூபாவிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்குமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் ஆதரவளிக்க முன்வரவில்லை என அறிவித்துவிட்டது. உமர் அப்துல்லாவின் தேசிய ஜனநாயகக் கட்சியும் மெஹபூபா உடன் கூட்டணி அமைக்காத போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் தேர்தல் நடக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.