Skip to main content

“பெரம்பலூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்” - அருண் நேரு உறுதி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Arun Nehru assured will make Perambalur constituency role model

எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்று திமுக வேட்பாளர் அருண் நேரு மக்களிடம் பிரச்சாரத்தின் போது உறுதியளித்தார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அருண் நேரு துறையூர் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் கிராமம் கிராமமாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். சென்ற இடமெல்லாம் அருண் நேருவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து திருச்சி லால்குடி தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி ஒன்றியத்தில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி திமுக வேட்பாளர் அருண் நேரு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அருண் நேரு பேசுகையில், “பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அருண் நேருவாகிய நான் உங்களில் ஒருவனாக போட்டியிடுகிறேன். பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி, இந்த பாராளுமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன்.

மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னின்று குரல் கொடுப்பேன். மக்களுக்காக பணியாற்ற காத்திருக்கும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வாய்ப்பு தாருங்கள்” எனப் பேசினார். பிரச்சாரத்தின் போது திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்