
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு இதன்மூலம் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதியும், தமிழ்நாட்டிற்கு ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் வரவேண்டிய நிதிகளை மத்திய அரசு உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (20.02.2025) கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று (21.02.2025) கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் இன்று (21.02.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் ஏற்கனவே தரமான கல்வியை வழங்கிக் கொண்டிருக்கிறது. பி.எம். ஸ்ரீ. பள்ளித் திட்டமாக தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கொண்டு வருவது. மற்றும் தொழிற்கல்வியை 6ஆம் வகுப்பில் இருந்து கொண்டு வருவது என்பது போன்ற செயல்கள் மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும்.
மாணவர்களின் நலனுக்கான கல்வி நிதி வேண்டுமெனில் எந்த நிபந்தனையும் விதிக்கக்கூடாது பி.எம்.ஸ்ரீ. க்கான கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்துகிறார். இது போன்று தமிழக அரசை, மத்திய அரசு பிளாக்மெயில் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கல்வி நிதி வழங்கப்படாத விவகாரத்தில் மாணவர்கள் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கூட்டணிக் கட்சிகள், மக்கள் என அனைவரும் மும்மொழிக்கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தூண்டில் போட்டுவிட்டு மீன் ஏதாவது சிக்காதா? என்ற ரீதியில் உள்ளது மத்திய அரசின் கடிதம்.

தமிழக அரசு தரமான கல்வியைத்தான் வழங்கி வருகிறது. கல்வி இடைநிற்றல் இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றி வருகிறோம். இருமொழி கொள்கையைப் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கல்வியில் சாதனை படைத்து வருகிறோம். தமிழின் பெருமையை மத்திய அரசு சொல்லி அறிய வேண்டியதில்லை. தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு மத்திய அரசு உடனே கல்விக்கான நிதியை விடுவிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் இருமொழி கொள்கையில் படித்த மாணவர்கள் அனைத்து துறைகளிலும் உள்ளனர். இஸ்ரோ உள்ளிட்ட உயர் துறைகளில் உயர் பதவியில் உள்ளவர்கள் தமிழ் வழி கல்வியில் படித்தவர்கள்தான்.
56 மொழிகளை இந்தி விழுங்கியுள்ளது. மொழிகளைத் திணிக்காமல் மாணவர்களின் மன அழுத்தத்தை மத்திய அரசு குறைக்க வேண்டும். மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்ட மாநிலத்தின் அதிகாரிகளே, மத்திய அரசின் மூலம் இந்தியைத் திணிப்பார்கள் என்று கூறுகின்றனர். புதிய கல்விக் கொள்கைக்குத் தமிழக அரசிடம் கருத்துக் கேட்டீர்களா? பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இருமொழிக் கொள்கையைப் பின்பற்றிய தமிழகம் முன்னேறியுள்ளது” எனத் தெரிவித்தார்.