Skip to main content

'மிகவும் வருத்தமடைந்துள்ளேன்' -இயக்குநர் ஷங்கர் விளக்கம்

Published on 21/02/2025 | Edited on 21/02/2025

 

'I am very saddened' - Director Shankar explains

எனது கதையைத் திருடி இயக்குநர் ஷங்கர், ‘எந்திரன்’ திரைப்படத்தை எடுத்ததாக, அவர் மீது நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

“என் கதையைத் திருடி ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்களை வைத்து`எந்திரன்' திரைப்படத்தை எடுத்து, இயக்குநர் சங்கர் மோசடி செய்திருக்கிறார். இது காப்புரிமைச் சட்டப்படி கிரிமினல் குற்றம்'' என்று  2011-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும், ‘நாங்கள் கதையைத் திருடவில்லை. இந்த வழக்கு செல்லாது என்று உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குக்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. இந்த சிவில் வழக்கில், 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, “ஜூகிபா' கதைக்கும் `எந்திரன்' சினிமாவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இதன் மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாகத் தெரிகிறது என்பதால், எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஷங்கருக்கு எதிரான வழக்கைக் காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம்” என்று அழுத்தமாகவே தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் எந்திரன் திரைப்பட கதை காப்புரிமை தொடர்பான வழக்கில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

'I am very saddened' - Director Shankar explains

இந்நிலையில் அமலாக்கத்துறையால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இயக்குநர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில், 'எந்திரன் படம் தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டு அடிப்படையில் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி விட்டது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளேன். எந்திரன் கதையின் உரிமையாளராக அறிவிக்கக்கோரிய ஆரூர் தமிழ்நாடனின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றம் முழுமையாக விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. இருதரப்பு ஆதாரங்கள், வாதங்களை ஆராய்ந்து ஆரூர் தமிழ்நாடன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்ற தீர்ப்பை நம்பாமல் வெறும் புகார் அடிப்படையில் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அமலாக்கத் துறையின் தொடர் நடவடிக்கையால் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன்.  தங்கள் நடவடிக்கை திரும்பப்  பெறாவிட்டால் மேல்முறையீடு செய்யப்படும்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்