எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகழேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலில் ஆரம்பம் முதலே சொல்லி வந்தேன். பழனிசாமியின் முடிவு மிக மோசமாக முடியும் என்று... இது மிகப்பெரிய தோல்வி. தேர்தல் களத்தில் நின்றுகொண்டு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், இரட்டை இலை சின்னம், கொங்கு மண்டலம் என அனைத்தும் எங்களிடம் இருக்கிறது என்றார். முதலமைச்சரை தரக்குறைவாக விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி.
இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறும் என்றால் ஈரோட்டில் போய் ஏன் வசனம் பேச வேண்டும். எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள மக்கள் யாரும் இல்லை. பிரச்சாரத்தில் அதிமுக பிரச்சார வாகனத்தை நிறுத்தி ஓபிஎஸ் எங்கே என மக்கள் கேட்கிறார்கள். 90% வாக்குகள் பதிவாகி இருக்க வேண்டும். ஆனால், 75% தான் பதிவாகியுள்ளது. மீதமுள்ள 15% எங்கே சென்றது. 90% வாக்குகளாவது வந்திருக்க வேண்டும்.15% வாக்குகள் அதிமுகவினர் வாக்குகள். அவர்கள் வாக்களிக்கவே வரவில்லை. அவர்களும் வந்திருந்தால் வாக்குப்பதிவு சதவிகிதம் 90 சதவிகிதத்தை எட்டியிருக்கும்.
10வது ரவுண்டில் போய் தான் டெபாசிட்டை காப்பாற்றி இருக்கிறார் அதிமுக வேட்பாளர். எப்படிப்பட்ட சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தமாகா வேட்பாளர் யுவராஜா காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெராவிடம் கடந்த தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோற்றார். இந்த இடைத்தேர்தலிலும் யுவராஜையே களத்தில் நிறுத்தி இருக்கலாம். இவர்கள் ஏன் குதித்தார்கள். சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறப் போகிறது. இப்போதும் காலம் கடந்து விடவில்லை. பழனிசாமி அவர்களே, ஓபிஎஸ் சொன்னதுபோல அதிமுக உங்க தாத்தா வீட்டு கட்சி அல்ல. இப்போதாவது ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமியிடம் போய் உங்கள் தலைமையை ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லி ஒற்றுமையை ஏற்படுத்தினால் நமக்கு நல்லது” எனக் கூறினார்.
முன்னதாக புகழேந்தி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தோல்விகள் போதும். பன்னீர்செல்வத்திடம் எடப்பாடி பழனிசாமி சரண்டர் ஆக வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினார். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.