அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிடும் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டர்.
அப்போது அவர், அரவக்குறிச்சி தொகுதியில் நீண்ட நாட்களாக எம்.எல்.ஏ. இல்லாத சூழல் இருக்கிறது. இதனால் தொகுதிக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. கொள்கை பிடிப்பில்லாதவர் தான் தி.மு.க. சார்பில் வேட்பாளராக நிற்கிறார். சுயநலம் கருதி பச்சோந்தியாய் இருப்பவர்களை கண்டறிந்து தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
மக்களின் எழுச்சியால் தமிழகம்-புதுச்சேரி உள்பட 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இதனால் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்பதை ஆணித்தரமாக சொல்லலாம்.
எங்களது கூட்டணி 2011-ல் அமைந்த கூட்டணி. சில துரோகிகளின் செயலால் அன்று கூட்டணி பிரிக்கப்பட்டது. ஆனால் கடவுளின் அருளால் மீண்டும் இந்த கூட்டணி அமைந்துள்ளது. 2011 தேர்தலின் வெற்றி வரலாறு, மீண்டும் 2019-ல் திரும்பி வரப்போகிறது. அப்படி நடக்கும் போது தமிழகம் முழுவதும் மக்கள் நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும்.
பிரதமர் பதவியேற்றவுடன் கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைந்து நதிநீர் இணைப்பு பற்றி வலியுறுத்துவோம். அதனால் தமிழகம் முழுவதும் விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை என்கிற நிலையே இருக்காது.
தி.மு.க. ஆட்சி வந்தாலே கட்டப்பஞ்சாயத்து தான் நடக்கும். ஆனால் தமிழகம் இன்று அமைதி பூங்காவாக இருக்கிறது என்பதை எண்ணி பார்த்து கொள்ளுங்கள். டி.டி.வி.தினகரன் அளிக்கும் வாக்குறுதிகள் எல்லாம் பொய்யானவை. இன்று அ.தி.மு.க.வில் சிலீப்பர் செல் இருக்காங்க என்று சொல்லி வருகிறார். உண்மையான சிலீப்பர் செல்லே டி.டி.வி.தினகரன் தான். வேறு யாராவது அ.தி.மு.க.வை விட்டு சென்று கட்சி ஆரம்பித்தார்களா?. இன்று வெளியே போய் கட்சியை ஆரம்பித்த ஒரே ஆள் டி.டி.வி.தினகரன் தான். அவருக்கும் சரியான பாடத்தை இந்த தேர்தலில் புகட்ட வேண்டும். இவ்வாறு கூறினார்.