பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா கடந்த 20ஆம் தேதி தொடர் காய்ச்சல் காரணமாக பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து இன்று அவர் விடுவிக்கப்படுவார் என்று சிறைத்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை மருத்துவமனையில் இருந்த அவர் விடுதலை செய்யப்பட்டார்.
சசிகலா விடுதலையையொட்டி அமமுக தொண்டர்கள் பெங்களுருவில் குவிந்தனர். அமமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (பெண்கள்) மற்றும் செய்தித் தொடர்பாளர் எம்.ஆர்.ஜெமிலா நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார்.
சசிகலா விடுதலையை அமமுக எப்படி பார்க்கிறது...
அமமுகவினருக்கு இரட்டை சந்தோஷமாக இருக்கிறது. கரோனாவில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருப்பது அமமுகவினருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
சசிகலா வருகையால் அரசியல் மாற்றம் நிகழும் என்ற விவாதம் நடக்கிறது. எந்த வகையில் மாற்றம் இருக்கும்? அதிமுக - அமமுக இணையுமா? அமமுக தலைமையில் ஒரு அணி வலுவடையுமா?
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பொறுத்திருந்து பாருங்கள். நிச்சயம் மாற்றம் இருக்கும்.
சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் சுப்ரமணிய ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளாரே...
கட்சியை வழிநடத்த சசிகலாதான் வரவேண்டும் என கட்சியின் தொண்டர்கள் விரும்புகின்றனர் என்பதைத்தான் இந்த போஸ்டர் காட்டுகிறது. பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
சசிகலா விடுதலையான இன்று ஜெ. நினைவிடமும் அதிமுக அரசு திறந்திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
''ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படுவதைப் பார்க்கும்பொழுது சசிகலாவின் விடுதலையைக் கொண்டாடுவது போல்தான் தோன்றுகிறது'' என்று எங்கள் பொதுச்செயலாளர் சொன்னதையேதான் நாங்களும் சொல்கிறோம் என்றார்.