8 நாள் அரசு முறைப் பயணமாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்குச் சென்றுள்ளார். முதல்வரின் இந்த வெளிநாட்டுப் பயணத்தில், முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வரின் உதவியாளர் தினேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் செயலாளர்கள் உமாநாத், அனு ஜார்ஜ், தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், செய்தித்துறை இயக்குநர் மோகன் ஆகியோர் சென்றுள்ளனர். சிங்கப்பூரில் இருந்து தனது இரண்டு நாள் அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு புல்லட் ரயிலில் பயணித்துள்ளார்.
அது தொடர்பாக புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த அவர், “ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணி நேரத்திற்குள் அடைந்து விடுவோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை - எளிய - நடுத்தர மக்கள் பயனடைந்து அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் புல்லட் ரயில் குறித்து பேசியது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “நான் புல்லட் ரயிலில் போகிறேன்; இந்தியாவிற்கும் அதை கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் கூறுகிறார். நாங்களும் புல்லட் ரயிலில் சென்றிருக்கிறோம்; அதில் ஒரு டிக்கெட்டின் விலை என்னவென்று தெரியுமா? புல்லட் ரயிலில் ஒரு டிக்கெட் விமான டிக்கெட்டின் விலையில் 80 சதவீதம் இருக்கும். ஏன் முதல்வர் அதை சொல்லவில்லை. வந்தே பாரத்தின் டிக்கெட்டின் விலை சாதாரண சாமானியன் பயன்படுத்தும் ஆட்டோவில் போகும் விலை போன்று இருக்கிறது. சென்னை - கோவை செல்லும் வந்தே பாரத் ரயிலில் 3 மாதத்திற்கு டிக்கெட்டே இல்லை. நான் ஒருவரிடம் கேட்டேன் எப்படி அண்ணா மூன்று மாதத்திற்கு முன்பே புக் பண்றீங்க என்று? அதற்கு அவர் சும்மா எப்படி இருக்கு என்று பாத்துட்டு வரலாம்னு புக் பண்ணேன் என்கிறார்.
ஆக அந்த அளவிற்கு வந்தே பாரத் ரயில் மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது. காட்சிக்கு மட்டும் புல்லட் ரயில் மாதிரி இல்லாமல், முழுமையாகவும் புல்லட் ரயில் வரவேண்டும் என்று முதல்வர் கூறுகிறார். மும்பை டூ அகமதாபாத் புல்லட் ரயில் வரவுள்ளது. பிரதமர் மோடியின் மேக் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்தையும் கொண்டு வந்து, அதன் விலையை குறைத்து சாமானிய மக்களும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் நீங்கள் அப்படி இல்லை. நீங்கள் செல்லும் புல்லட் ரயிலில் டிக்கெட்டுக்கு பணம் உங்களுடையது இல்லை. எங்களுடைய பணத்தில்தான் நீங்கள் புல்லட் ரயிலில் பயணம் செய்கிறீர்கள். உங்களுடைய அதிகாரி டிக்கெட் எடுக்கிறார். அதை வைத்து நீங்கள் பயணம் செய்கிறீர்கள். ஆனால் நாங்க பூ விற்பவர்கள், மாங்கா விற்பவர்கள், தேங்கா விற்பவர்களை எல்லாம் எப்படி புல்லட் ரயிலில் அழைத்துச் செல்லலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கி வைத்த சென்னை டூ கோவை வந்தே பாரத் ரயிலில் எக்னாமிக் க்ளாசில் ரூபாய் 1365 என்பதும் சாதாரண ரயிலில் கோவை டூ சென்னை ரூ.325 என்பதும் குறிப்பிடத்தக்கது.