முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை ஒட்டி இன்று திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.
இந்நிகழ்வானது, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இந்த அமைதிப் பேரணி துவங்கியது. இந்த பேரணி மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா சதுக்கம் சென்று நிறைவடைந்தது.
அண்ணா நினைவிடத்தில் முதல்வர், திமுக அமைச்சர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்த அமைதிப் பேரணியில் திமுக மூத்த நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, துரைமுருகன் உள்ளிட்டோரும் திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியம் போன்றோர்களும் பங்கேற்றனர்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், “களம் சென்று காணுகின்ற வெற்றிக்கு நம்மையெல்லாம் ஊக்குவிக்கும் தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா நீடுதுயில் கொண்ட நாள்! தம்பி என்று தமிழர்தமைத் தட்டியெழுப்பிய அண்ணனின் நினைவுகளைச் சுமந்து, தம்பிமார் படை அமைதிப் பேரணிச் சென்றோம்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம்! தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம்!” எனக் கூறியுள்ளார்.