மே19 அன்று நடக்கக் கூடிய திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் சீட் கேட்க இருக்கிறார் என்ற தகவல் அதிமுகவினர் மத்தியில் பரவி வருகிறது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே. போஸ் திடீரென உடல்நலக் குறைவால் இறந்ததால் அந்த தொகுதிக்கு வருகிற மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் சீட்டுக்காக ஆளுங்கட்சியினர் பலரும் மோதி வருகிறார்கள்.
ஆனால் 2016 ல் நடந்த சட்டமன்ற தேர்தலின்போதே நத்தம் விஸ்வநாதன், தனது தொகுதியான நத்தம் தொகுதியில், தான் வழக்கம் போல் போட்டியிட ஜெயலலிதாவிடம் சீட்டு கேட்டார். ஆனால் அப்பொழுது ஜெயலலிதா, நத்தம் தொகுதியை ஒதுக்க ஆர்வம் காட்டவில்லை என்பதை தெரிந்த விஸ்வநாதன் திருப்பரங்குன்றம் தொகுதியை கூட கேட்டாராம். ஆனால் ஜெயலலிதா இரண்டு தொகுதிகளையும் கொடுக்காமல் ஆத்தூர் தொகுதியை ஒதுக்கினார்.
ஆனால் ஆத்தூர், திமுக தொடர்ந்து வெற்றிபெறும் தொகுதியாகும். அந்த 2016 தேர்தலிலும் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிடம்(திமுக) போட்டியிட்டு விஸ்வநாதன் தோல்வியைத் தழுவினார்.
அதன்பின் அரசியலில் சரிவர ஆர்வம் காட்டாமல் இருந்த விஸ்வநாதன் ஜெ மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் சேர்ந்து, தற்பொழுது ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரிடமும் நத்தம் விஸ்வநாதன் நெருக்கமாக இருந்து வருகிறார். அதன் அடிப்படையில்தான் நடக்கக்கூடிய திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சீட் கேட்கிறார் என்ற பேச்சு அதிமுகவினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதோடு திருப்பரங்குன்றம் தொகுதியை விஸ்வநாதனுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விஸ்வநாதனின் ஆதரவாளர்கள் முன்வைத்து வருகிறார்கள் என்ற பேச்சும் மாவட்ட அளவில் பரவலாக பேசப்பட்டும் வருகிறது.