பிரதமர் மோடி நேற்று மாலை 6 மணிக்கு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், “ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் கரோனா நம்மை விட்டுப் போய்விடவில்லை. தற்போது ஊரடங்கு காலம் முடிந்து, வீட்டை விட்டு வெளியே வரத் தொடங்கியுள்ளோம். இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது. அதனை நாம் கெடுத்துவிடக்கூடாது. மேலும், நாம் அனைவரும் முன்பைவிட தற்போதுதான் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரும் பண்டிகைக் காலங்களில் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து விழிப்புடன் இருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று மத்திய சென்னை மேற்கு மாவட்டத்தின் பா.ஜ.க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை பா.ஜ.கவின் தமிழக தலைவர் எல்.முருகன் தலைமை வகித்து திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின்போது, முக்கியத் தலைவர்கள் தவிர, பல நபர்கள் முகக் கவசம் அணியாமல் இருந்தனர். மேலும், யாரும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை. முன்பு பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவின்போதும் இதேபோல்தான் நடந்தது. அதற்காக மாநிலத் தலைவர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் தற்போது அதேபோல் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம், பேனர் வைப்பதற்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் இந்நிகழ்ச்சிக்காக பல்வேறு பகுதிகளிலும் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.