திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உருவபொம்மையை அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சரும் நத்தம் எம்.எல்.ஏ.வுமான நத்தம் விஸ்வநாதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகலா மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில், “சசிகலா தாய் அல்ல பேய்” என்று குற்றம்சாட்டினர். நத்தம் விசுவநாதனின் இந்த அவதூறு பேச்சைக் கண்டிக்கும் விதமாக மாவட்டம் முழுவதிலும் அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நிலக்கோட்டை மற்றும் வத்தலகுண்டு ஒன்றிய அமமுக நிர்வாகிகள், இன்று (23.06.2021) நிலக்கோட்டை நான்குமுனை சந்திப்பில் அக்கட்சியின் மாநில மின்வாரியச் செயலாளர் ரஷித் தலைமையில் மாவட்டப் பொருளாளர் செல்வகுமார், அம்மா பேரவைச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் நத்தம் விஸ்வநாதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவரது உருவ கட்டவுட்டைத் தீயிட்டுக் கொளுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
சசிகலாவை அவதூறாகப் பேசிய நத்தம் விஸ்வநாதன் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தெரிவித்தனர். நிலக்கோட்டையில் அதிமுக எம்.எல்.ஏ. தேன்மொழி வீட்டின் அருகே நத்தம் விசுவநாதன் உருவ பொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.