சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து கடந்த மாதம் விடுதலையான சசிகலா, கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜனவரி 31ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு, பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் ஓய்வு எடுத்து வருகிறார்.
சசிகலா பிப்ரவரி 8ஆம் தேதி தமிழகம் வருகிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரை வரவேற்க அமமுகவினர் தயாராகியுள்ளனர். இதற்காக அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஓசூரில் முகாமிட்டுள்ளனர். அதிக அளவில் அமமுகவினர் அங்கு குவிந்ததால் அனைத்து தங்கும் விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக, அமமுகவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் ஓசூரில் குவிந்துள்ளனர். சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சசிகலாவை வரவேற்க திட்டமிட்டுள்ள அவர்கள், அவரை வரவேற்று பெரிய அளவில் பேனர்களை கட்டியுள்ளனர். சசிகலாவை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்களில் ''நாளை நமதே 234 நமதே'' என்ற வாசகமும், ''நட்பின் இலக்கணம்'', ''கழகம் காத்த கடவுள்'', ''தியாக தலைவி'' எனவும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.