
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சில்லறை விற்பனை விலையைக் குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனைச் சமாளிக்கும் விதமாக மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாயை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் பெட்டோல் மற்றும் டீசல் மீதான விற்பனை விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் ஒரு லிட்டர் 92 ரூபாய் 34 பைசாவிற்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலையை ரூ. 50 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “வீட்டு உபயோகத்திற்கான எல்.பி.ஜி. சிலிண்டரின் விலை ரூ. 50 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு சிலிண்டர் விலையானது 500 ரூபாயில் இருந்து, ரூ. 550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மானிய விலையில் சிலிண்டரை பெறுபவர்களுக்கு 803 ரூபாயில் இருந்து 853 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வானது வரும் காலங்களில் மறுபரிசீலனை செய்யப்பட்டும். இவற்றை ஒவ்வொரு 2 முதல் 3 வாரங்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்கிறோம். எனவே, கலால் வரி அதிகரிப்பு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான நுகர்வோருக்கானது அல்ல. அந்த கலால் வரி அதிகரிப்பு, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு எரிவாயுப் பகுதியில் ஏற்பட்ட இழப்பான ரூ.43 ஆயிரம் கோடியை ஈடுசெய்யும் நோக்கம் கொண்டது” எனத் தெரிவித்துள்ளார். வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ள செய்தியானது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.