
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 3 ஆம் தேதி அதிகாலை 2 பெண்கள் தெருவில் நடந்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் இரு பெண்களையும் பின் தொடர்ந்து, அதில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், பெங்களூருவில் பெண்கள் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், ஆளும் அரசுக்கு எதிராகவும் பாஜகவினர் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.

இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்த கருத்து மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, “பெங்களூரு போன்ற ஒரு பெரிய நகரத்தில் இங்கும் அங்குமாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவம் நடக்கும் போதெல்லாம் அந்த சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கிறது. விழிப்புடன் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு பெங்களூரு காவல் ஆணையரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்” என்று கூறினார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை நியாயப்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவின் பேச்சு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.