தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முறையாக செய்யவில்லை என்று திமுக தரப்பு உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் ஒருவழியாக தினகரன், தன் அ.ம.மு.க. கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இது பற்றி விசாரித்த போது, உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நேரத்தில் தன் கட்சிக்கு பொதுச் சின்னத்தை வாங்கும் வாய்ப்பும் அவருக்கு இதன்மூலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
ஆனால், அ.ம.மு.க.விலேயே இருக்கும் சீனியர்கள் சிலர், இது சிறையில் இருக்கும் எங்க சின்னம்மா சசிகலாவுக்கே தெரியாமல் தினகரனால் நடத்தப்பட்டிருக்கும் மூவ். ஏனென்றால், சசிகலாவைப் பொறுத்தவரை, சிறையில் இருந்து வெளியே வந்ததும், ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வாக இயங்க வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால் தினகரனோ, எக்காரணத்தைக் கொண்டும் அ.ம.மு.க.வை. அ.தி.மு.க.வோடு இணைத்து விடக் கூடாது என்று நினைப்பதாக கூறுகிறார். அதோடு தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக ஒரு தனி அணியை சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அமைக்க வேண்டும் என்பது அவரது ஆசை. அதற்குள் ரஜினியும் கட்சியைத் தொடங்கிடுவார் என்கிற எண்ணத்தில் ரஜினியோடும் ரகசியப் பேச்சு வார்த்தையிலும் இருக்கிறார் தினகரன் என்கின்றனர். ஆனாலும் ரஜினி இவரிடம் இன்னும் பிடிகொடுக்கவில்லை என்று அரசியல் வட்டாரங்களில் கூறிவருகின்றனர்.