Published on 07/08/2019 | Edited on 07/08/2019
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 35A நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. இந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவை மற்றும் மாநிலங்களைவையில் கொண்டு வந்து மசோதாவை நிறைவேற்றினார். மேலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். இதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் இது அப்பகுதி மக்களின் உரிமைகளை பறிக்கும் செயலக இருக்கிறது என்றும் கூறினார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லடாக் பகுதியை சேர்ந்த இளம் எம்.பி ஜம்யங்-நாம்கி நேற்று பாராளுமன்றத்தில் பேசினார். காஷ்மீர் மற்றும் லடாக்கை பிரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலர் லடாக்கிற்கு இதற்கு முன் வந்திருக்கிறார்களா? லடாக் என்றால் என்ன என்று தெரியுமா ? என்று ஆவேசமாக பேசினார். இவர் பேசும் போது எதிர்க்கட்சிகள் அமைதியாக இவர் பேசுவதை கவனித்து கொண்டிருந்தனர். லடாக் பகுதியை இதுவரை யாரும் கண்டுகொண்டதில்லை, லடாக் பகுதியில் பள்ளிகள் இல்லை, மருத்துவமனைகள் இல்லை மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருக்கின்றனர். அந்த வலி எங்களுக்கு தான் தெரியும் என்றார். மத்திய அரசின் இந்த முடிவை ஒவ்வொரு லதாக் மக்களும் கொண்டாடுகின்றனர் என்று கூறினார்.