கடந்த ஒரு வாரமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி பிரமுகர்கள் மூலம் முகக் கவசம் வழங்கி வரும் அமைச்சர் விஜயபாஸ்கர், தனது விராலிமலைத் தொகுதியில் நலிவடைந்தவர்களுக்கு அரிசி பைகளை வழங்கினார். அந்தப் பையில் ''நாளைய முதல்வர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்'' என்று கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் செய்யப்பட்டது. அதை வட்டமிட்டு காட்டி விஜயபாஸ்கரின் அரிசி பைகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. அதில் சிலர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்ணில் படும் வரை பகிருங்கள் என்ற வாசகங்களுடன் பகிர்ந்திருந்தனர்.
இதனையடுத்து புதுக்கோட்டை அ.தி.மு.க தகவல் தொழில் நுட்பப் பிரிவு நகரச் செயலாளர் குணசீலன் நகர காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் நாளைய முதல்வர் என்று மார்பிங் செய்து வெளியிட்டது அ.ம.மு.க. மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் விழுப்புரம் முத்துக்குமார்தான் என்று புதுக்கோட்டை போலிசார் விழுப்புரம் சென்று முத்துக்குமாரை கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், பொதுவெளியில் எல்லாராலும் பகிரப்பட்ட தகவலைத் தனது கணக்கில் பகிர்ந்ததற்காக முத்துக்குமாரை திடீரென கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. பல ஆயிரம் பேர் பகிர்ந்த ஒரு செய்திக்குக் குறிப்பிட்டு அ.ம.மு.க.வைச் சேர்ந்த முத்துக்குமாரை கைது செய்வது, அரசுக்கு அ.ம.மு.க. மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் ஆட்சியாளர்களின் ஆணவப் போக்கிற்கு போலீஸார் இணங்கிச் செல்லக் கூடாது என்றும், கைது செய்யப்பட்ட முத்துக்குமாரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து முதல்வருக்கும், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையே பிரச்சனையை தினகரன் தரப்பு வேண்டும் என்றே செய்து வருகின்றனர் என்று அதிமுகவினர் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அமைச்சர் தரப்பு அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.