ஜன.30—ஆம் தேதி மு.க.அழகிரியின் பிறந்த நாளன்று மதுரை மாநகரமே "ச்சும்மா அதிருதுல்ல'' ரேஞ்சுக்கு இருந்ததெல்லாம் ஒரு காலம். இந்த ஆண்டோ அழகிரியின் பிறந்த நாளை அவரது குடும்பத்தினர் மட்டுமே அமைதியாகவும் ஆனந்தமாகவும் கொண்டாடினார்கள். பிறந்த நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அழகிரியின் வீட்டிற்குச் சென்ற மன்னன், முபராக் மந்திரி உட்பட சிலர், "அண்ணே இந்த வருஷம் உங்க பிறந்த நாளை ஜாம்ஜாம்னு கொண்டாடுவோம்' என்றதும், "அடப் போங்கய்யா நீங்களும் உங்க கொண்டாட்டமும். எனக்கும் என் தம்பிக்கும் இடையில தனிப்பட்ட பகையா என்ன? உங்களுக்கு கட்சிப் பதவி வாங்கிக் கொடுக்கணும்னு தான் சண்டை போட்டேன். ஆனா நீங்க என்னடான்னா எனக்கு துரோகம் பண்ணியவர்களுடன், ஃபாரீன்ல நியூ இயர் கொண்டாடி, அதை ஃபேஸ்புக்ல வேற போட்டிருக்கீங்க. அதனால் இந்த வருஷம் யாரும் என் வீட்டிற்கு வராதீங்க'' என கடுப்படித்துவிட்டாராம் அழகிரி.
தனது பிறந்த நாளன்று, முன்னாள் அரசு வக்கீல் மோகன்குமாரின் இல்லத் திருமணத்திற்குச் சென்ற அழகிரி, மணமக்களை வாழ்த்திப் பேசிவிட்டு, ""அவர் ஒருவர் மட்டும் கலைஞர் மகனல்ல நானும் கலைஞர் மகன்தான். அ.தி.மு.க. காரங்கக்கூட எனக்கு வணக்கம் சொல்றாங்க. ஆனா நம்ம ஆளுங்க நன்றி மறந்துட்டாங்க. கண்டிப்பா எனக்கும் காலம் வரும்'' என குமுறிவிட்டார். திருமண விழாவிற்கு வந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், பொன்.முத்து, தேனி மூக்கையா, மதுரை மா.செ.க்கள் மூர்த்தி, தளபதி, மணிமாறன் ஆகியோர் அழகிரியைப் பார்த்ததும் நைசாக சைடு வாங்கி விட்டார்கள். ""அண்ணே போனப்புறம் சொல்லுங்க, நான் வர்றேன்'' என சொல்லிவிட்டாராம் ஆ.ராசா.