தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதிமுக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலைச் சந்தித்த பாமக, நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டது. இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த ஊராட்சித் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலின் முடிவுகளில் திமுக 90 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றியது. குறிப்பாக மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 140 இடங்களில் 138 இடங்களை திமுக கைப்பற்றியது.
இதன் மூலம் இந்த 9 மாவட்டங்களிலும் திமுக கூட்டணியே தலைவர் பதவியைக் கைப்பற்ற இருக்கிறது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலிலும் 1000க்கும் மேற்பட்ட இடங்களை திமுக கூட்டணியே கைப்பற்றியது. தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலுடன் சில மாவட்டங்களின் ஊராட்சிக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில், நாமக்கல் மாவட்டத்தில் 6வது வார்டு உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த பி.ஆர். சுந்தரம் ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அவ்வார்டுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் துரைசாமி வெற்றி பெற்றார். முன்னதாக, நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிமுகவில் 11 பேர், திமுகவில் 5 பேர், பாமக சார்பில் ஒருவர் என இருக்கின்றது.
தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் வரும் 22ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் அதிமுகவை சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இருவர் நேற்று (20.20.2021) திமுகவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து மொத்தம் 17 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களில் திமுகவின் பலம் எட்டாக அதிகரித்துள்ளது. தற்போது திமுகவும், அதிமுகவும் சம பலத்துடன் இருப்பதால் வரும் 22ம் தேதி மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் கடும் போட்டு நிலவும் என கூறப்படுகிறது. காரணம் பாமக உறுப்பினரை தன் வசம் இழுக்கும் முயற்சியில் இரு கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது.