
நாடாளுமன்ற மக்களவையில் இன்று (27.03.2025) குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா, 2025வின் மீது திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. உரையாற்றினார். அதாவது, “அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025, குடியேற்றச் சட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், சுதந்திரத்திற்கு முந்தைய பல சட்டங்களை ஒரே சட்டக் கட்டமைப்பாக ஒருங்கிணைப்பதற்குமானதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த மசோதா அளிக்கும் வாக்குறுதிகளைத் தாண்டி, அரசாங்கத்தின் அதிகப்படியான கட்டுப்பாடு, அடிப்படை உரிமைகள் பறிப்பு, நீதித்துறை மேற்பார்வையின்மை, மற்றும் தன்னிச்சையான முடிவெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் போன்ற முக்கியமான விசயங்கள் குறித்து கவலை எழுப்புகிறது. பன்னாட்டு சட்டத்தின்படி, வெளிநாட்டவர்களின் நுழைவை ஒழுங்குபடுத்தும் இறையாண்மை அதிகாரம் நாடுகளுக்கு உண்டு. ஆனால், பன்னாட்டு பாதுகாப்புத் தேவைகளை மதிப்பிடுவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் நுழைவு இடங்களில் இல்லாதபோது, இந்த மசோதா ‘non-refoulement” என்ற கொள்கைக்கு முரணாக இருக்கலாம். non-refoulement என்ற கொள்கை, தனிநபர் சித்திரவதை, மனிதத்திற்கு புறம்பான நடத்தை, உயிர் அல்லது சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் போன்ற ஆபத்துகள் உள்ள நாடுகளுக்கு அனுப்பப்படுவதிலிருந்து பரந்த அளவில் பாதுகாக்கிறது.
இது சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தும் நடத்தை அல்லது தண்டனைக்கு எதிரான உடன்படிக்கையின் (CAT) 3வது பிரிவு, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) 6 மற்றும் 7வது பிரிவுகள், மற்றும் குழந்தைகள் உரிமைகள் பற்றிய உடன்படிக்கையின் (CRC) 37வது பிரிவு ஆகியவற்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பன்னாட்டு சட்டத்தின் மையக் கொள்கையான non-refoulement அனைத்து நாடுகளுக்கும் கட்டாயமான கடமையாகும். தேசிய பாதுகாப்புக் கவலைகளும் அகதிகளுக்கான பாதுகாப்புக் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய வெளிநாட்டவர்களைத் தங்கள் நாட்டிற்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கு நாடுகளுக்கு நியாயமான காரணங்கள் உண்டு – அது வழக்கு நடத்துதலைத் தவிர்ப்பதற்காகவோ அல்லது தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கைக் குலைக்கும் செயல்களை மேற்கொள்வதைத் தடுப்பதற்காகவோ இருக்கலாம்.
1951-ஆம் ஆண்டின் அகதிகளின் நிலை குறித்த மாநாடு மற்றும் அதன் 1967-ஆம் ஆண்டு நெறிமுறை ஆகியவை உலகளாவிய அகதி பாதுகாப்பு சட்டங்களின் முக்கிய ஆவணங்களாகும். இந்தச் சட்டங்கள், நாடுகள் தங்கள் நிலப்பரப்பிற்குள் நுழையும் நபர்களை அடையாளம் காணவும், பன்னாட்டுப் பாதுகாப்புத் தேவை உள்ளவர்களின் பதிவுகளை வைத்திருக்கவும், பன்னாட்டு சட்டத்தின்படி பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கவலைகளைச் சமாளிக்கவும் அனுமதிக்கின்றன. எடுத்துக்காட்டாக, இவை பயங்கரவாதச் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள நபர்களை அகதி நிலையிலிருந்து விலக்குவதற்கு வழிவகுக்கின்றன, இதனால் அவர்கள் குற்றவியல் வழக்கு, ஒப்படைப்பு அல்லது வெளியேற்றம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க முடியாது. அதிகப்படியான அரசாங்க கட்டுப்பாடு.
இந்த மசோதாவின் பிரிவு 7, உட்கூறு 2 அரசாங்கத்திற்கு ஆணையிடும் முழுமையான அதிகாரத்தை வழங்குகிறது. அரசு தனக்குத் தானே கூடுவதை தடைச்செய்வதற்கும் இயக்கத்தை கட்டுப்படுத்தவும் மேலும் நடத்தையை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை வழங்கிக் கொள்ளும்போது, அது தேசிய பாதுகாப்பைக் காக்கிறதா, அல்லது கருத்து மாறுபாடுகளை ஒடுக்குகிறதா?. வெறும் ஒரு ஆணை மூலம், ஒரு வெளிநாட்டவர் "குறிப்பிட்ட வகையான செயல்பாடுகளில்" ஈடுபடுவதை தடைசெய்யலாம். ஆனால், இந்த "செயல்பாடுகள்" என்பதை யார் வரையறுக்கிறார்கள்? கருத்து வெளிப்பாடு, சங்கங்கள் அமைத்தல் அல்லது அரசியல் ஈடுபாடு போன்றவை "விரும்பத்தகாதவை" என அறிவிக்கப்பட்டால், அது பேச்சு சுதந்திரத்தை வேண்டுமென்றே அழிப்பதாகாதா?. நீதியைக் காக்கும் ஒரு நாடு, தனது குடிமக்களின் வாழ்க்கையின்மீது அரசாங்கத்திற்கு வரம்பற்ற தன்னிச்சையான அதிகாரத்தை வழங்காது. ஆனால், இந்த மசோதா தெளிவற்ற, வரையறுக்கப்படாத காரணங்களின் அடிப்படையில் வெளிநாட்டவர்களைக் கைது செய்யவோ, நாடு கடத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ அதிகாரிகளுக்கு அனுமதிக்கிறது. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட பல சட்டங்கள், ஏற்கனவே தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்காகவும், தன்னிச்சையான கைதுகள், நீடித்த சட்டப் போராட்டங்கள் மற்றும் கருத்து சுதந்திரத்தை அடக்குவதற்காகவும் விமர்சிக்கப்பட்டுள்ளன. இந்த மசோதாவும் அதே வழியில் பயன்படுத்தப்படுமோ?.
மனித உரிமை மீறல்களுக்கான வாய்ப்புகள் இந்த மசோதா உருவாக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. வெளிநாட்டவர்களுக்கு "கேட்கப்படும் உரிமை" (right to be heard) மறுக்கப்படுவதாகும். ஒரு குடிபெயர்வு அதிகாரி, ஒருவரின் நுழைவு, தங்குதல் அல்லது நாடுகடத்தல் குறித்து இறுதி முடிவை எடுக்கும்போது, அந்த நபருக்கு தன் வழக்கை முன்வைக்க அல்லது முறையீடு செய்ய எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இது இயற்கை நீதியின் (Natural Justice) அடிப்படைக் கொள்கையான "ஒருவரும் கேள்விக்கு உட்படுத்தப்படாமல் தண்டிக்கப்படக்கூடாது" என்பதற்கு முரணானது. பன்னாட்டு சட்டக் குழு (ILC) வெளிநாட்டவர்களின் நாடுகடத்தல் குறித்த தனது ஆய்வில், "நாடுகளின் அதிகாரம் தன்னிச்சையாக (arbitrary) இருக்கக்கூடாது" என வலியுறுத்தியுள்ளது. ILC-யின் விளக்கவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, குடிபெயர்வு குறித்த அதிகாரம் இறையாண்மை உடையதாக இருந்தாலும், அது அடிப்படை உரிமைகள் மற்றும் நியாயமான நடைமுறை (due process) வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது. ரகசியமாக எடுக்கப்பட்ட முடிவுகள், முறையீடு செய்ய முடியாத நிலை மற்றும் தன் வாதத்தை முன்வைக்க முடியாத சூழ்நிலைகள் நீதியல்ல – அவை பன்னாட்டு சட்ட மரபுகளை மீறுவதாகும்.
பன்னாட்டு அரங்கில், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு சங்கிலிகளால் இணைக்கப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் நாடுகடத்தப்படும் சம்பவங்களை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். இந்த புதிய மசோதாவின் கடுமையான விதிகள், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மற்றும் புலம்பெயர்ந்துள்ளவர்களுக்கு கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தும். கடந்த காலத்தில் (2006ல்) இந்திய கடவுச்சீட்டு உலக தரவரிசையில் 71வது இடத்தில் இருந்தது. ஆனால் 2025ல், இந்தியாவின் 85வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது இந்தியாவின் வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச இயக்கத்திறனில் பின்தங்கியுள்ளதைக் காட்டுகிறது. பிற நாடுகள் தங்கள் குடிமக்களின் பயணத்திற்கு வசதியான ஒப்பந்தங்களை வலுப்படுத்தும்போது, இந்தியாவின் இந்த வீழ்ச்சி, வணிகம், கல்வி மற்றும் சுற்றுலா துறைகளில் வாய்ப்புகளைக் குறைக்கிறது. இந்த மசோதா, கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மற்றும் தனியார் விடுதிகளின் மீது அதிகப்படியான அதிகார பாரத்தை ஏற்றுகிறது. இது அவர்களை அரசின் கண்காணிப்பு ஏஜென்ட்களாக மாற்றுகிறது. இது வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்தியாவை ஒரு கல்வி இலக்காக தேர்ந்தெடுப்பதில் தயக்கத்தை ஏற்படுத்தும். மேலும், அகதிகள் மற்றும் நாடற்ற நபர்கள் கல்வி, மருத்துவ சிகிச்சை, வசிப்பிடம் ஆகியவற்றைப் பெறுவதை கடினமாக்கும்.
இந்தியா மருத்துவ சுற்றுலாத்துறையில் ஒரு முன்னணி நாடாக உயர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், வெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சை பெறுவதை தடுக்கும் ஒரு சட்டத்தையா நாம் விரும்புகிறோம்? வெளிநாட்டவரின் வரையறை மற்றும் அகதிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வாய்ப்பை இழத்தல் : இந்த மசோதா, இந்தியாவில் அகதிகளின் நுழைவு மற்றும் ஒழுங்குமுறை குறித்து எந்தத் தீர்வையும் வழங்கவில்லை, இது அவர்களின் நிலை குறித்த நிச்சயமற்றத் தன்மையை மேலும் அதிகரிக்கிறது. இந்த மசோதா "வெளிநாட்டவர்" என்பவரை இந்தியக் குடியுரிமை இல்லாதவர் என்றே எளிமையாக வரையறுக்கிறது. ஆனால், உலகமயமாக்கலின் இந்தக் காலத்தில், வேலை, பொருளாதார நடவடிக்கைகள், சுற்றுலா, அகதி நிலை, அடைக்கலம் தேடுதல் அல்லது நாடற்ற நிலை போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் நாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர். இந்த மசோதா இந்த சிக்கலான தன்மையை அங்கீகரிக்கவில்லை மற்றும் அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கவில்லை. இந்த மசோதாவின் முக்கியமான குறைபாடு என்னவென்றால், சட்டவிரோத குடிபெயர்வாளர்கள் (illegal migrants) மற்றும் அகதிகள்/அடைக்கலம் தேடுபவர்கள் (refugees/asylum seekers) இடையே வேறுபாட்டை காட்டவில்லை. பல்வேறு நாடுகள் துன்புறுத்தலில் இருந்து தப்பி வரும் நபர்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை கொண்டுள்ளன. ஆனால், இந்த மசோதா மனிதாபிமான அடிப்படையில் விதிவிலக்குகள் (humanitarian exemptions) எதையும் வழங்கவில்லை.
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கானப் பாதுகாப்பு : இந்த மசோதாவின் மாற்றங்கள், தற்போது இந்தியாவில் வாழும் 90,000 இலங்கைத் தமிழ் அகதிகளை கடுமையாக பாதிக்கும். இவர்களில் பெரும்பாலோர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வருகின்றனர். மார்ச் 1, 2025 நிலவரப்படி, 29 மாவட்டங்களில் உள்ள 103 மீள்குடியேற்ற முகாம்களில் 19,949 குடும்பங்கள் (57,285 நபர்கள்) வாழ்ந்து வருகின்றனர். இந்த முகாம்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் விதிமுறைகளின் படி செயல்படுகின்றன. இங்கு குடிநீர், மின்சாரம், உணவு வழங்கல் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் வரலாற்றுப் பங்கு மற்றும் மனிதாபிமானப் பாதுகாப்புகளின் அவசியம்: தமிழ்நாடு பல்லாண்டுகாளாக இலங்கைத் தமிழர் அகதிகளை ஏற்று பராமரித்து வருகிறது. இந்த மசோதா மனிதாபிமானப் பாதுகாப்புகள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டால், நான்கு தசாப்தங்களாக தமிழ்நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்படும்.
இந்தியாவில் வெளிநாட்டவர்களை நிர்வகிக்கும் எந்தச் சட்டக் கட்டமைப்பும், இந்த அகதிகளின் சிறப்பு மனிதாபிமான நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு சட்டப்பூர்வ தெளிவு, பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்வாதார வழிகளை வழங்க வேண்டும். ஒரே மாதிரியான வரையறை - மனிதாபிமான நிலைமைகளை புறக்கணித்தல்: இந்த மசோதா, "வெளிநாட்டவர்" என்பவரை "இந்தியக் குடியுரிமை இல்லாத எந்தவொரு நபரும்" என்று வரையறுக்கிறது. இது பின்வரும் முக்கியமான வேறுபாடுகளை புறக்கணிக்கிறது: பொருளாதார காரணங்களால் குடிபெயர்வோர் (Economic migrants), ஆவணங்கள் இல்லாது நுழைபவர்கள் (Undocumented entrants), போர்/உள்நாட்டு மோதல்களால் தப்பி வரும் நாடற்ற அகதிகள் (Stateless refugees). நாடற்ற அகதிகளின் குற்றமயமாக்கல் (பிரிவு 3 மற்றும் பிரிவு 21), பிரிவு 3, இந்தியாவில் நுழைய அல்லது தங்க ஒவ்வொருவரும் செல்லுபடியான கடவுச்சீட்டு மற்றும் விசா வைத்திருக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறது. பிரிவு 21, இதை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை அல்லது ₹5 லட்சம் அபராதம் விதிக்கிறது. இந்த விதிகள் கடுமையாக செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டில் வாழும் பெரும்பாலான இலங்கைத் தமிழர் அகதிகள் குற்றவியல் வழக்குகளுக்கு உள்ளாகலாம் – இருப்பினும் பலர் போர் மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து தப்பி, பல தசாப்தங்களுக்கு முன்பு ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்கு வந்தவர்கள்.
ஆதாரம் நிரூபிக்கும் பொறுப்பு தனிநபர் மீது (பிரிவு 16) பிரிவு 16, "நான் வெளிநாட்டவன் அல்ல" என்பதை நிரூபிக்கும் பொறுப்பை தனிநபர் மீது சுமத்துகிறது. இது முகாம்களில் பிறந்தவர்கள் அல்லது ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு ஒரு நியாயமற்ற சுமை. இது வலுக்கட்டாயமாக தாய்நாடு திருப்பி அனுப்பப்படும் அபாயத்தை உருவாக்குகிறது – குறிப்பாக, இலங்கையில் இனம், மொழி அல்லது குடும்பத் தொடர்புகள் இல்லாதவர்களுக்கு. சிறப்பு பரிந்துரைகள்: இலங்கைத் தமிழ் அகதிகளை நீண்டகால அகதிகளாக சட்டத்தில் தனித்துவமான வகையாக அங்கீகரிக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் வாழ்ந்தவர்கள் அல்லது இங்கு பிறந்தவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு விரைவான குடியுரிமைக்கு சட்டப்பூர்வ பாதையை உருவாக்க வேண்டும். பழங்குடியின மக்களின் வாழ்விடம், கல்வி, பொருளாதாரம், முதலியவை மேம்பட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி. ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த பத்தாண்டுகளில் பழங்குடியின மக்களின் மனிதவள மேம்பாட்டு குறியீடு மற்றும் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளதா என கண்டறிய ஒன்றிய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் அதன் விவரங்கள் மற்றும் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் பழங்குடியின மக்கள் ஒரே அளவிலான சமமான வளர்ச்சி அடைய ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி. அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் கச்சா பொருட்கள் கொள்முதல் செய்யும்போது உள்நாட்டு சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை திமுக மக்களவை கொறடாவும் நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். அதோடு கடந்த மூன்றாண்டுகளில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடன் தொகை எவ்வளவு என்றும் இந்நிறூவனங்களுக்கு எளிதாக கடன் கிடைத்தல், தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் சந்தையை அணுகுவதில் உள்ள சிக்கல்களை களைய அரசு தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வெளியிடுமாறும் அவர் கேட்டுள்ளார். திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., ‘வேலூர் மற்றும் தூத்துக்குடியை நேரடியாக இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை (NH)-38இன் மதுரை-தூத்துக்குடி சாலை பகுதி மிகுந்த மோசமாக பரமாரிப்பதை சுட்டிக்காட்டி இன்று நாடாளுமன்றத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். மேற்குறிப்பிட்ட பகுதியில் பராமரிப்பு சிக்கல்கள் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டிருந்தாலும் ஒன்றிய அரசு அவற்றை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று கேட்டிருக்கும் அவர், பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சாலைகளை மோசமாக பராமரிக்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் கேட்டுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் பொருளாதார ரீதியாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசு உருவாக்கிய பிரதமர் கடன்வசதி திட்டத்தின் செய்லபாடுகள் குறித்து காஞ்சிபுரம் திமுக எம்.பி. ஜி. செல்வம் மற்றும் திருவண்ணாமலை திமுக எம்.பி. சி. என். அண்ணாதுரை கேள்வி எழுப்பியுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு: இத்திட்டம் தொடங்கிய நாள் முதல் தற்போதுவரை தமிழ்நாட்டில் பயனடைந்த மொத்த பயனாளர்கள் எவ்வளவு இத்திட்டத்தில் முதல் கடன்தொகையை சரியாக திருப்பி செலுத்தி பின்னர் இரண்டாவது கடன் பெற்றவர்கள் எவ்வளவு பேர் மற்றும் மூன்றாவது முறையாக கடன் பெற்றவர்கள் இருந்தால் அவர்களது எண்ணிக்கை விவரம். அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இத்திட்டத்தின்மூலம் அடையாள அட்டை வழங்கப்படுகிறதா? இத்திட்டத்தின்கீழ் டிஜிட்டல் முறையில் பண பறிமாற்றம் செய்யும் வியாபாரிகளின் எண்ணிக்கை எவ்வளவு? கடனை முறையாக திருப்பி செலுத்தும் வியாபாரிகளுக்கு வழங்கப்படும் மானியம் எவ்வளவு?’ எனக் கேள்வி கேட்டுள்ளார்.