Skip to main content

கே.டி.  ராகவனுக்கு பொறுப்பு! - அண்ணாமலையின் அதிரடி முடிவு! 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

K.T. Raghavan! The action of Annamalai!

 

2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியா முழுக்க இருக்கும் தேசிய மற்றும் மாநில கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளைத் துவங்கி தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக பா.ஜ.க.வுக்கு எதிரான 35க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி எனும் மெகா கூட்டணியை அமைத்துள்ளன. அதேவேளையில், பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு அடுத்து பெரிய கட்சியாக இருந்த அ.தி.மு.க. சமீபத்தில் அந்தக் கூட்டணியில் இருந்து வெளியே வந்தது. 

 

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டதும் இது ஒரு தேர்தல் நாடகம் விரைவில் அவர்கள் ஒன்றிணைவார்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தெரிவித்திருந்தனர். ஆனால், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என உறுதியாகத் தெரிவித்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதியில் 9 தொகுதிகளைக் கைப்பற்ற பா.ஜ.க. தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களே பேசி வந்தனர். 

 

அதற்கான பணிகளும் தமிழ்நாடு பா.ஜ.க.வில் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் பா.ஜ.க. தனித்து போட்டியிட திட்டமிட்டிருக்கிறதோ என சிந்திக்கும் வகையில், 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

 

K.T. Raghavan! The action of Annamalai!

 

அதன்படி, தென்காசி தொகுதிக்கு பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஈரோடு தொகுதிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக கே.டி. ராகவன், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு எஸ்.ஜி. சூர்யா, நாமக்கல் தொகுதிக்கு பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, திருவள்ளூர் தொகுதிக்கு என்.எல். நாகராஜன், தென்சென்னைக்கு பாஸ்கர், அரக்கோணம் தொகுதிக்கு பாஜக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி, சேலத்துக்கு தமிழக பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம், மத்திய சென்னைக்கு ஜி. ராதாகிருஷ்ணன், தர்மபுரிக்கு முனிராஜ், வட சென்னைக்கு பெப்சி சிவகுமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு பாஜக மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் ஆகியோர் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் அனைவரும் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும் என பா.ஜ.க. மாநிலத் தலைமை அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்