Skip to main content

மு.க.ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்... சரத்குமார் பேச்சு

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார், மே 19ஆம் தேதி நடைபெற உள்ள ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
 

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வி.பி.கந்தசாமியை ஆதரித்து சரத்குமார் பேசும்போது, 
 

எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை ஜெயலலிதா வழிநடத்தினார். தற்போது அவர் இல்லையே என்ற ஏக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாதையில் எடப்பாடி பழனிசாமி சிறந்த முறையில் மக்களுக்காக சேவை செய்து வருகிறார்.

 

saratkumar


விவசாயிகளுக்காக அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். விவசாயிகளுக்கு ஒன்று என்றால் முதலில் கொதித்து எழும் ஆட்சிதான் இது. ஜெயலலிதா கொண்டு வந்துள்ள திட்டத்தை கூறினால் நேரம் போதாது. அதுபோன்றுதான் எடப்பாடி பழனிசாமியும் பல திட்டங்களை கொண்டு வந்து உள்ளார். 
 

மக்களை பற்றி சிந்திக்கிறவர்கள்தான் ஆட்சியில் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டும் என்றால் தற்போது நடைபெறும் 4 இடைத்தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டு விட்டது. கண்டிப்பாக 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். பதவி சுகம் அனுபவித்தவர்கள்தான் தற்போது தேர்தலை உருவாக்கி இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து இருக்கிறார்கள். ஸ்டாலின் சொன்ன கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 

மு.க.ஸ்டாலினுக்கு வேண்டியது எல்லாம் முதல்-அமைச்சர் என்ற பதவிதான். மக்களை பற்றி அவர் சிந்திக்கவில்லை. காற்றாலையையும் காசாக்க முடியும் என்று ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தது அவர்கள்தான். அராஜக ஆட்சியை நடத்தியவர்களும் அவர்கள்தான். இந்த தேர்தல் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஸ்டாலின் கூறுகிறார். 23-ந் தேதி அன்று எங்கள் ஆட்சி வரும் என்று அவர் சொல்கிறார். அவரால் எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாது. இவ்வாறு கூறினார்.

சார்ந்த செய்திகள்