திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்திலுள்ள மாதனூர், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், வடபுதுப்பட்டு, மிட்டாளம் உட்பட 9 கிராம பஞ்சாயத்துகளுக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே திட்டத்தின்கீழ் மாவட்டத்திலுள்ள மற்ற 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த ஒன்றியங்கள் டெண்டர் வைத்து பணிகளை பிரித்து வழங்கியுள்ளது. மாதனூர் ஒன்றியத்தில் மட்டும் இந்த நிதிக்கான டெண்டர் நடக்கவில்லை. அதற்கு காரணம் மாதனூர் ஊராட்சியிலுள்ள 44 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 22 ஒன்றிய கவுன்சிலர்களுக்கு இடையே 2.5 கோடி ரூபாய் டெண்டரை பங்கு பிரிப்பதில் தகராறு உருவாகியுள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார் போன்றவர்களிடம் எங்களுக்கு 60 சதவிகித பணிகள் ஒதுக்க வேண்டும், ஒன்றியக்குழு கவுன்சிலர்களுக்கு 40 சதவிகித பணிகள் ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் ஒப்புக்கொள்ளவில்லையாம். எங்களுக்கு 70, அவர்களுக்கு 30 சதவிகிதம் என கவுன்சிலர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் 2 முறை டெண்டர் தேதி அறிவிக்கப்பட்டு அது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் செப்டம்பர் 29 ஆம் தேதி மாலை மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் கூட்டம் தனித்தனியே எம்.எல்.ஏ தலைமையில் நடந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார், துணைத்தலைவர் சாந்தியின் கணவர் சீனுவாசன் கலந்து கொண்டுள்ளனர்.
அங்கு நடந்த பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களிடம், 40 சதவிகிதம் உங்களுக்கு, மீதி 60 சதவிகிதம் எனக்கு எனச்சொல்லியுள்ளார் எம்.எல்.ஏ. அப்போது ஒரு ஊராட்சிமன்ற தலைவர், திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு 50 சதவிதம் தருகிறார் எனச்சொல்லியுள்ளார். திருப்பத்தூர் எம்.எல்.ஏ, ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ பிரிச்சி தர்றாங்கன்னா அது பின்னாடி வேறு விவகாரம் இருக்கு என எம்.எல்.ஏ சொல்லும் அந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.
எம்.எல்.ஏ கமிஷன் எதுவும் கேட்கவில்லை என மாதனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதனிடம் நாம் கேட்டபோது, “ஊராட்சி மன்ற தலைவர்கள் – கவுன்சிலர்கள் இடையே நிதி ஒதுக்குவதில் பிரச்சனை. இருதரப்பினரிடம் சேர்மன், அதிகாரிகள் பேசியும் பிரச்சனை தீரவில்லை. ஊராட்சி மன்ற தலைவர்கள் என்னிடம் பிரச்சனையை தீர்க்கச்சொல்லி கேட்டார்கள், அதிகாரிகளும் வலியுறுத்தினார்கள். அதனாலயே இரண்டு தரப்பிடமும் பேசினேன். கவுன்சிலர்களுக்கு 60 சதவிதம், தலைவர்களுக்கு 40 சதவிகித பணிகள் எடுத்துக்கொள்வது என பேசினேன். இதை நான் கமிஷன் கேட்டதாக திரித்து வெளியிட்டுள்ளார்கள். இப்போது வெளிவந்துள்ள வீடியோவை பாருங்கள், முழு வீடியோவை வாங்கிப் பாருங்கள் நான் எங்காவுது கமிஷன் கேட்டு பேசியிருக்கிறேனா எனப்பாருங்கள். நான் கலைஞர், மு.க.ஸ்டாலின் வழியில் நடப்பவன், என்மீது மக்கள் யாரும் குற்றம்சாட்டவில்லை. என் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்” என்றார்.