"பா.ஜ.க.வை வீழ்த்த தேசிய அளவில் கூட்டணி அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயல வேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை முன்னாள் உறுப்பினருமான எம்.கிருஷ்ணசாமி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், "உழைப்பு என்றால் அது நமது முதலமைச்சர்தான். உழைப்பு உழைப்பு உழைப்பு. அந்த எழுத்துக்கு முழு உரிமை படைத்தவர்தான் நமது முதலமைச்சர். எடுத்தவுடனேயே இந்த உயரத்திற்கு அவர் வரவில்லை. எத்தனையோ போராட்டங்கள், தியாகங்கள் செய்துதான் வந்துள்ளார். தமிழகத்தின் முதலமைச்சராக வந்து ஒன்றரை ஆண்டுக்குள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை 85 சதவீதம் நிறைவேற்றியுள்ளார்.
அத்துடன், புதுப் புது திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இன்று தமிழகத்தை இந்திய துணைக் கண்டமே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார். தொலைக்காட்சிகளை பார்த்தால், செய்தித் தாள்களை படித்தால் முதலமைச்சரின் திட்டங்கள், தொடக்க விழாக்கள் என அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் காலை முதல் இரவு வரை பார்த்துக் கொண்டே இருக்கிறோம். எதிர்க்கட்சியினர் கூட இப்படி உழைக்கிறாரே என்று சொல்கிறார்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் எட்டு அடி பாய்ந்தார் என்றால் அவருடைய மகன் நமது முதலமைச்சர் 80 அடி பாய்கிறார். எதிர்க்கட்சி தலைவர்களை கூட எதிரிகளாக பார்க்காமல் அவர்களுக்கும் மரியாதை கொடுக்கும் பாங்கை பார்க்கும்போது பிரமித்து போயிருக்கிறேன். தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சரின் செயல்பாடுகளை கண்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பாராட்டுகிறார்கள். மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தமிழகத்திற்கு உரிய நிதிகளை கொடுக்காமல் ஆளுநர் மூலம் அடக்கி ஆள நினைக்கிறது. மாநில உரிமையை பேணிக் காத்து சரியான பதிலடி கொடுத்து வருகிறார் நமது முதலமைச்சர்.
இந்திய துணைக் கண்டத்தில் உள்ள தலைவர்கள் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வியூகம் அமைக்கவிருக்கிறார்கள். அந்த வியூகத்தின் முதல் தளபதியாக நமது முதலமைச்சர்தான் இருப்பார். 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஏற்பட்ட கூட்டணியை சிறப்பாக இன்று வரை வழிநடத்தி செல்கிறார். நாளையும் வழிநடத்தி செல்வார். தமிழகத்தில் ஏற்பட்ட ஒற்றுமை கூட்டணி போல் மத்தியிலும் கூட்டணியை நம் முதல்வரே முன்னின்று ஏற்படுத்திட வேண்டும் என்று அகில இந்திய தலைவர்கள் கலந்துகொள்ளும் அவரது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் சூளுரையாக சபதம் ஏற்று, மத்தியில் ஆளும் பா.ஜ.கவை விரட்ட வேண்டும் என்று அவரது பிறந்தநாளில் கேட்டுக் கொள்கிறேன். மார்ச் ஒன்றாம் தேதி பிறந்தநாள் காணும் நமது முதலமைச்சர் உடல் ஆரோக்கியத்தோடு மேலும் மேலும் நல்ல புகழும் பெருமையும் கிடைக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்." என்று தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் கிருஷ்ணசாமி.