அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், இன்று (15.12.2024) நடைபெற்றது. இந்த கூட்டமானது அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதாவது, ஃபெஞ்சல் புயலில் சரியாக செயல்படாத திமுக அரசுக்கு கண்டனம். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக வரி விதிப்பு உள்ளிட்டவற்றிற்கு கண்டணம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம். டங்ஸ்டன் சுரங்கத்தை ஆரம்பத்திலேயே தடுக்க தவறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது. மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை தவிர்த்து ஆங்கிலத்தில் பெயர் வைக்க வலியுறுத்தப்படும். ஃபார்முலா 4 பந்தயம், பேனா நினைவு சின்னம் உள்ளிட்டவற்றிற்காக நிதியை வீணடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம். குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம். கோதாவரி - காவிரி, பரம்பிகுளம் - ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா திட்டங்களை தொடர தவறிய திமுக அரசுக்கு கண்டனம். நீட் தேர்வு ரத்து குறித்து நாடகமாடும் திமுக அரசுக்கு கண்டனம்.
வாக்காளர் பட்டியலில் நிலவும் குளறுபடிகளை சரிசெய்து நியாயமாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி தீர்மானம். சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க திமுக அரசை வலியுறுத்தி தீர்மானம். இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளாத திமுக அரசுக்கு கண்டனம் கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க அரசியலமைப்பில் சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம். தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வை பாரபட்சமின்றி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம். 2026இல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கிடையே அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டத்திற்கு வரும்பொழுது அவருடைய ஆதரவாளர்கள் சிலர் உள்ளே அனுமதிக்கப்படாததால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதே சமயம் சாலையில் இருந்து செல்லும் நுழைவு வாயிலில் அனுமதிச்சீட்டு இல்லாதவர்கள் முண்டியடித்து, உள்ளே சென்ற போது பாதுகாப்பு காவலர்கள் மற்றும் அதிமுகவினர் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில், ‘அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தர வேண்டும். அதன்படி கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.