![AIADMK vice-whip again appeals to ``take urgent action...''](http://image.nakkheeran.in/cdn/farfuture/Kdhw7bXCVHnXntiIpedFo0Wc7jN-r2v-tnr13nYXklg/1665752164/sites/default/files/inline-images/b52_6.jpg)
ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்துவந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களில் அ.தி.மு.க-வில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. இதனால் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். அத்துடன், கட்சியின் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓபிஎஸ்-ஐ நீக்கி அதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். மேலும், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/dCRaHmbUS0hFicIBeEzDNhuHx1c8ddoxmeuCkDqU9QA/1665752348/sites/default/files/inline-images/tn%20govt6_0_13_1.jpg)
வரும் அக்டோபர் 17- ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் கூடுகிறது. அ.தி.மு.க. சார்ந்த எந்த முடிவை எடுத்தாலும் தம்மிடம் கலந்தாலோசிக்க வேண்டும் எனக் கோரி சபாநாயகர் அப்பாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார்.அதனைத் தொடர்ந்து கடந்த 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி சார்பாக சட்டப்பேரவை செயலாளருக்குக் கடிதம் ஒன்று எழுதப்பட்டது. அதில் 'அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற அடிப்படையில் ஆர்.பி.உதயகுமாரை சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த கடிதத்தை அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி சட்டப்பேரவை செயலாளரிடம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தந்த மனு மீது துரித நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக துணை கொறடா ரவி மீண்டும் சட்டப்பேரவைச் செயலாளரிடம் மனு கொடுத்துள்ளார். மறுபுறம் தமிழக அமைச்சரவை தலைமைச் செயலகத்தில் கூடியுள்ளது. ஜெ.மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தந்த விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அறிக்கை, வடகிழக்கு பருவமழை, புதிய தொழில் முதலீடுகள், வேலைவாய்ப்புகள் குறித்து அமைச்சரவையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.