மகளிர் தினத்தையொட்டி, சேலம் மாவட்டம் மேட்டூரில் பாமக சார்பில் முப்படைகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். இளைஞரணி தலைவர் அன்புமணி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:
பெண்கள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். தமிழகத்தில் இளைஞர்களும், இளம்பெண்களும் சேர்ந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் நல்ல பல திட்டங்களை செயல்படுத்த முடியும். தமிழகத்தை பாமக ஆள வேண்டும். அப்போது ஒரு பைசா கூட செலவு செய்யாமல், உயர்கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், செலவின்றி நல்ல மருத்துவ உதவிகள் அனைவருக்கும் கிடைக்கும். பாமக ஆட்சிக்கு வந்தால், 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு அன்புமணி பேசினார்.
அதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எந்தக் கட்சி தொடங்கினாலும், அடுத்தது எங்கள் ஆட்சிதான் என்று கூறுகின்றனர். பாமக துவங்கி 30 ஆண்டுகள் ஆகின்றன. வேறு கட்சியினர் ஆட்சி அமைக்க நாங்கள் கட்சியைத் தொடங்கவில்லை. நாங்கள் ஆட்சி அமைக்கத்தான் பாமகவை தொடங்கினோம். அடுத்த சட்டமன்றத் தேர்தலின்போது நாங்கள் அதிமுகவுடன் கூட்டணியில் நீடிப்போமா இல்லையா அல்லது வேறு யாருடன் கூட்டணி என்பது குறித்து கட்சியின் நிறுவனர் முடிவெடுப்பார்'' என்றார்.