அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் எழுந்து, அதனைத் தொடர்ந்து பொதுக்குழுக் கூட்டமும் நடைபெற்று முடிந்த நிலையில், ஓபிஎஸ்-இபிஎஸ் பிளவு காரணமாக அது தொடர்பான சிக்கல்கள் தற்பொழுது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், ''எம்ஜிஆர் காலத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் பொதுக்குழு எவ்வளவு சிறப்பாக, சரித்திர பெயர் வாய்ந்த பொதுக்குழுவாக இருக்கும் என தெரியும். ஆனால் அண்மையில் அதிமுகவில் நடந்தது சரித்திரத்தில் இது போன்ற ஒரு தவறான நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எந்த ஒரு அரசியல் இயக்கத்திலும் நடக்கக் கூடாத ஒரு கருப்பு நாளாக இருக்கிறது'' என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் 'திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போனார்கள்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளது குறித்து கேள்வி எழுப்ப, '' 'கலைஞர் ஒரு தீய சக்தி' என்று சொல்லித்தான் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அந்த இயக்கத்தை வழி நடத்தினார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த தைரியத்தில் இப்படி பேசுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு இயக்கம் இருக்கின்றது என்பதை ஸ்டாலின் மறந்துவிட்டார். ஜெயலலிதாவின் தொண்டர்கள் இருக்கிறார்கள், எம்ஜிஆர் தொண்டர்கள் இருக்கிறார்கள். வருங்காலத்தில் ஜெயலலிதாவுடைய ஆட்சி அமைக்கப்படும். தமிழ்நாட்டில் திமுகவிற்கு சாவு மணி அடிப்போம். அதிமுக என்பது அயோக்கியர்களின் கூடாரமாக மாறிவிட்டது. வருங்காலத்தில் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம். அவர்களது கொள்கைகளை கடைபிடிப்போம். அதன் பிறகு அதிமுக கட்சியை நாங்கள் கைப்பற்றுவோம்'' என்றார்.