கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து பல்வேறு இடங்களில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சரா? ஜெயலலிதாவுக்கு தான் மக்கள் வாக்களித்தார்கள். அவரது மறைவுக்கு பின்னர் நடந்த கூத்துகள் எல்லாருக்கும் தெரியும். கூவத்தூர் பங்களாவில் அடைக்கப்பட்டதில் ஒரு எம்.எல்.ஏ. சுவர் ஏறி குதித்து ஓடினார். ஒரு எம்.எல்.ஏ. ஓடும் பஸ்சிலிருந்து இறங்கி ஓடினார். எடப்பாடி பழனிசாமி 10 மாத குழந்தைபோல் தரையோடு தரையாக தவழ்ந்து சென்று சசிகலாவின் காலை பிடித்ததை மறக்க இயலுமா?.
மோடி போட்ட பிச்சை இந்த முதல்-அமைச்சர் நாற்காலி. மோடிக்கு கடந்த மாதம் 18-ந்தேதி டாடா காட்டிவிட்டோம். தனது ஆட்சியில் 38 ஆயிரம் போராட்டம் நடந்திருப்பதாக எடப்பாடி பழனிசாமியே பெருமையாக கூறுகிறார். இதுவெல்லாம் சாதனையல்ல... வேதனை. எந்த கட்சியின் உதவியும் இல்லாமல் தூத்துக்குடியில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் காவல்துறையை வைத்து 13 பேரை காக்கா, குருவியை போல சுட்டு கொன்றனர். ஆயிரம் பேர் கூடியதால் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறினர். எனவே இந்த ஆட்சி தேவையா? என்பதை சிந்தித்து பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.
தற்போது ஜெயலலிதா ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக மூச்சுக்கு முன்னூறு தரம் கூறுகின்றனர். ஆனால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்தது எப்படி? என்பது குறித்து கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை.
ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக முதலில் கூறியவர் ஓ.பன்னீர்செல்வம். சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக்கூறியதோடு அவர் நின்றுவிட்டார். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் திட்டங்களை தீட்டுவது ஒருபுறமிருப்பின், முதல் வேளையாக ஜெயலலிதா மரண சந்தேகம் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வது தான் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு பேசினார்.