உள்ளாட்சித் தேர்தல் குறித்தான ஆலோசனைக் கூட்டத்தினை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை நேற்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டார். அதன்படி, நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. பதிவான வாக்குகள் பிப்.22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜனவரி 28ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுத்தாக்கல் ஆரம்பமாகிறது. பிப்.4 தேதி மனுத்தாக்கல் முடிவு பெறுகிறது. பிப்.5 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவைத் திரும்பப்பெற பிப்ரவரி 7ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நாளை மாலை அதிமுக ஆலோசனையில் ஈடுபட இருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் நாளை மாலை ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோருடன் நேர்காணல் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.