Skip to main content

“தச்சர், பிளம்பர் வேலைக்கும் இந்தி..! இது ஏகாதிபத்திய மனநிலை..” மத்திய அரசை கண்டிக்கும் ராமதாஸ்

Published on 09/05/2022 | Edited on 09/05/2022

 

PMK Leader Ramadoss condemn for hindi

 

“தமிழ்நாட்டில் இந்தியில் தேர்வு நடத்தி உள்ளூர் மக்களுக்கு கடைநிலை வேலைகளைக் கூட மறுப்பதா” என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பிளம்பர் உள்ளிட்ட ’சி’ பிரிவு பணிகளுக்கு கூட இந்தியில் தான் தேர்வும், நேர்காணலும் நடத்தப்படுகின்றன. அதனால், 95% வேலைவாய்ப்புகள் உள்ளூர் மக்களுக்கு கிடைக்காமல் வட இந்தியர்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்; அந்த ஊர் மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்  என்பது தான் நடைமுறையாகும். அது தான் நியாயமும், இயற்கை நீதியும் கூட.

 

ஆனால், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்க வேண்டும் என்பதற்காகவே கல்பாக்கத்தில் இந்தியில் தேர்வு நடத்தப்படுவதாகத் தோன்றுகிறது. இது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என 1978-ல் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு எதிரானது ஆகும். கல்பாக்கம் அணுமின் நிலையம், புதுவை ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் மேற்கொள்ளும் இந்தித் திணிப்பைப் பார்க்கும் போது இது இந்திய நாடா.... அல்லது .... ஹிந்திய நாடா?  என்ற ஐயம் தான் எழுகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு வலு சேர்க்காது.

 

தச்சர், பிளம்பர் போன்ற திறன் சார்ந்த பணிகளுக்கு திறனும், பயிற்சியும் தான் முக்கியம்; மொழி அல்ல. எல்லாமே இந்தியில் தான் என்பது ஏகாதிபத்திய மனநிலை. அதை விடுத்து  சி, டி பிரிவு பணிகளுக்கு தமிழில் தேர்வு நடத்தவும், உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் கல்பாக்கம் அணுமின் நிலையம் முன்வர வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.  

 


 

சார்ந்த செய்திகள்