அதிமுக தொகுதி பங்கீடு குழுவுடன் கடந்த 14ஆம் தேதி பாஜக தமிழக பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சவார்த்தையில் பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அ.தி.மு.க. தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., கே.பி.முனுசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
3 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் தமிழகம் - புதுவையில் மொத்தம் உள்ள 40 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு 25 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 15 தொகுதிகள் என முடிவாகி உள்ளதாக தெரிகிறது.
அ.தி.மு.க. தனது தொகுதிகளில் த.மா.கா., என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியை விட்டுக் கொடுத்தது போக 22 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், பா.ஜனதா தனது தொகுதிகளில் பா.ம.க.வுக்கு 4 தொகுதிகளும், தே.மு.தி. க.வுக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்தது போக மீதம் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொகுதி பங்கீடுகள் பேச்சுவார்த்தை அளவில் மட்டுமே உள்ளது. இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பியூஷ் கோயல் ஓரிரு நாளில் மீண்டும் சென்னை வந்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார். வருகிற 19-ந்தேதி மாசி பவுர்ணமி நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் கூட்டணி தொடர்பான அறிவிப்புகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதனிடையே திமுக கூட்டணியில் இணைவது குறித்து பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் பாமகவை அதிமுக கூட்டணியில் இடம்பெற வைக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்கிறதாம்.