ஆளுங்கட்சியான அதிமுக இப்போது இருந்தே உள்ளாட்சித் தேர்தலுக்கு விறுவிறுப்பாக வியூகங்களை வகுக்கத் தொடங்கியிருக்கு என்று அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர். அ.தி.மு.க.வின் தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் மா.செ.க்களின் ஆலோசனைக் கூட்டம் 6-ந் தேதி நடந்தது. கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் உற்சாகமாக கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. எல்லோரும் அமைச்சரவை மாற்றம் பற்றி ஏதாவது அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் அது பற்றி எதுவும் பேசவில்லை என்று சொல்லப்படுகிறது.
அப்போது வைத்திலிங்கம் எம்.பி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தலை நாம் நடத்த வேண்டாம். நடத்தினால் அது தி.மு.க.வுக்கு தான் சாதகமாக அமையும் என்று தங்கள் பயத்தை வெளிப்படுத்தி உள்ளதாக சொல்கின்றனர். உடனே ஓ.பி.எஸ். எழுந்து, நீதிமன்றத்தை இனியும் நம்மால் சமாளிக்க முடியாது. அதனால் டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தலை நாம் நடத்தியே ஆக வேண்டும். தேர்தலுக்கான நோட்டிபிகேஷன் இன்னும் இரண்டு வாரத்தில் வெளியாகப்போகிறது. இடைத்தேர்தலில் வியூகம் வகுத்து நாம் வெற்றிபெற்றது போல் உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் அமோக வெற்றியினைப் பெற்றாக வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். அப்போது சிலர் எழுந்து, உள்ளாட்சித் தேர்தலிலும் நமது இப்போதைய கூட்டணியே தொடருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் கூறிய ஓ.பி.எஸ்., இதே கூட்டணி தொடர வாய்ப்பு இருக்கு என்று புன்னகையோட கூறியுள்ளார்.